வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா?
நண்பர் ஒருவர் இளங்கலை பட்டம் படித்தவர், நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல நல்லதொரு வாழ்க்கை துணையை தேடி தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் பெற்றோர்களுடன் களமிறங்குகிறார்.
சில இடத்தில் திருமணப்பொருத்தம் குறைவாக உள்ளது எனப் பெண் வீட்டார் சொல்வார்கள், சிலர் பையனுக்குப் படிப்பு குறைவாக இருக்கிறது எனச் சொல்வார்கள், ஓரு சிலர் பையன் நிறம் குறைவாக உள்ளது எனச் சொல்வார்கள். பையனுக்குச் சொந்த வீடு இல்லையா? என்றும் சொல்வார்கள். இது போன்ற கேள்விகளைப் பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் எழுப்புவது இயல்புதான் தவறேதுமில்லை.

ஆனால் ஒரு பெண் வீட்டார் பெண் தர முடியாது என்பதற்கு சொன்ன காரணத்தைத் தான் இன்னமும் சீரணிக்க முடியவில்லை, என்னடா நாடு இது இந்தளவிற்கு அடிமுட்டாள்களாக இருக்கிறார்களே என்று வருத்தமடைய வைக்கிறது.

பக்கத்து ஊருக்குப் பெண் பார்க்க நண்பர் சென்றுள்ளார், அந்தப்பெண் SSLC படித்துள்ளாரெனப் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். சரி பரவாயில்லை, எங்களுக்குப் படிப்பு முக்கியமில்லை பெண்ணின் குணம் தான் முக்கியம் என மாப்பிள்ளை வீட்டார் கூற, சரிங்க எங்களுக்குப் பெண் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையுமில்லை, மாப்பிள்ளை என்ன படித்துள்ளாரெனப் பெண் வீட்டார் கேட்டுள்ளனர். மாப்பிள்ளை B.Com படித்துள்ளார், Accountant (கணக்கர்) வேலையில் நல்ல சம்பளத்தில் சென்னையில் வேலை செய்கிறாரென மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.

பெண்வீட்டார் : "பையன் Engineer இல்லீங்களா?.

மாப்பிள்ளை வீட்டார் : Engineer இல்லீங்க அவரு Accountant.

பெண் வீட்டார் : நாங்க பொண்ணு கொடுத்தா இஞ்சினியர் மாப்பிள்ளைக்குத் தான் கொடுப்போம்.

மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு SSLC தானே எப்படி இஞ்சினியர் மாப்பிளையா தேடுறீங்க ?

பெண் வீட்டார் : இல்லீங்க எங்க பொண்ணு SSLC தான். ஆனா ஒன்னாம் வகுப்பில் இருந்து SSLC வரைக்கும் English Medium-யதில் படிச்சுருக்கு, அதனால தான் Engineer மாப்பிள்ளையா தேடுறோம். அதனால மன்னிச்சுகுங்க .... நீங்க வேற இடத்தில பொண்ணு பாத்துக்குங்க.

எனச் சொல்லிவிட்டனர்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரின் அறிவை கண்டு ஆடிப்போய் "ஆளை விட்ட போதுமட சாமி" என்று பெண்வீட்டாரிடம் "நல்லதொரு குடும்பம் - பல்கலை கழகம்" என்று சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடி விட்டனர். பொண்ணு தர முடியாது என்று சொல்வது பெண்பார்க்கும் படலத்தில் மிக இயல்பு. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணங்களில் இந்தக் காரணம் மிகப் புதுமையானது. இனிவரும் காலங்களில் இது போன்ற காரணங்களை ஆங்காங்கே கேட்டாலும் வியப்பில்லை, காரணம் ஆங்கில மோகம். இந்த மோகம் எப்படியெல்லாம் மனிதனை ஆட்டுவிக்கிறது? பிள்ளைகளின் திருமண வாழ்கையை கூட ஆங்கிலத்தை வைத்து முடிவு செய்யும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என நினைக்கும்போது இந்த மோக நோய் எந்தளவிற்கு தமிழகத்தை தாக்கியுள்ளது எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கிலமோக நோயை விரட்டுவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னுட்டங்களை பார் : OR

0 முன்னிகை :

கருத்துரையிடுக