சனி, 7 செப்டம்பர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2)

உலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது நம் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த சுழலில் நல்ல தரமான, சரியான சொற்களை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறு ஒரே மூலப்பொருள் சுட்டும் பல சொற்களைப் சொல்லாக்கம் செய்துள்ளனர். எடுத்துகாட்டாக யானை என்ற விலங்கை சுமார் 170 பெயர்களில் அழைத்தனர். யானையின் குணம், வடிவம், செய்கை, தோற்றம், பயன்பாடு, இடம், இனம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சொல்லாக்கம் செய்துள்ளனர். இதுபோல் பல சொற்களைச் சொல்லலாம். தமிழ் மொழியில் ஒரு பொருளுக்கு ஒரு சொல் தான் என்றில்லாமல், பல்வேறு சொற்களை கொண்டுள்ளது அக்காலத்திய சொல்லாக்க திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தற்காலத்தில் அன்றாடம் புதுபுது சொற்கள் மற்ற மொழிகளில் வந்துகொண்டிருக்க அவைகளுக்குச் சரியான ஒரு தமிழ் சொற்களை கூட உருவாக்கமுடியாமல் திணறி வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருக்க வேண்டிய சொற்களுக்கு கூட இன்றும் சொற்களை உருவாக்கி அதை வழக்கில் கொண்டுவர முடியாமல் தவிக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஓரிரு வாரங்களில் வழக்கத்தில் வந்துவிடுகிறது, ஆனால் தமிழ்ச்சொற்கள் வழக்கத்திற்கு வர பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்ற செல்லே நடைமுறைக்கு வர 24 ஆண்டுக் காலம் ஆனதாக சொல்லப்படுகிறது. 

உண்மையில் நாம் செய்யும் தவறு தான் என்ன? என்று நாம் சிந்ததுண்டா?. எப்போது ஆங்கிலேயர் நம் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே தமிழினம் மட்டுமில்லை தமிழ் மொழியும் அடிமைப்பட்டு விட்டது. நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்கிறோம், ஆனால் தமிழ் இன்னமும் அயல் மொழிக்கு அடிமைப்பட்டு தான் கிடக்கிறது.
சொல்லாக்கம் என்பது ஒரு மொழியின் மரபையறிந்து, தேவைப்படின் மரபை மீறியும், ஏற்கெனவே உள்ள சொல்லைத் திருத்தியோ, பதுக்கியோ புதுச்சொல்லாக உருவாக்குதல் என்று வரையறுக்கலாம். இன்றைய அறிவியல் தொழில் நுட்பமும் பல்வேறு துறைகளும் நாளும் வளர்ந்து வரும் சூழலில், அளவிட இயலாதவாறு புதிய சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடியான சூழல், தமிழில் சொல்லாக்க முயற்சியில் முனைந்திருப்பவர்களுக்குச் சவாலாக உள்ளது. தகவல் வெள்ளத்தில் பெருகிவரும் பல்துறைத் தகவல்களுக்கேற்ப, சொல்லாக்கத்தில் தொடர்ந்து செயற்படும் வல்லுநர்கள், சொற்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். சொற்களின் மூலங்கள் எப்படி அமைந்துள்ளன என்ற புரிதல் சொல்லாக்கத்தினை நுட்பமாகச் செய்திட உதவும். ~ நன்றி : Tamilvu.org


மேலே உள்ள பதிவை பார்த்தோமேயானால் சொல்லாக்கம் பற்றிய இரண்டு முக்கிய கருத்துக்கள் விளங்கும்

1) மொழி மரபு அறிந்து, தேவைபட்டால் மரபை மீறியும், ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்தியோ அல்லது பதுக்கியோ புதிய சொற்கள் உருவாக்கலாம்.

2) பழந்தமிழ் சொற்களின் மூலம் எவ்வாறு அமைத்துள்ளது என்பது பற்றிய அறிவு புதிய சொல்லாக்கத்திற்கு பெரிதும் உதவி செய்யும்.மேற்சொன்ன கருத்துக்கள் உண்மையில் சொல்லாக்கத்தின் போது பின்பற்றவேண்டிய முக்கிய விதிகள் ஆகும்.

மரபை மீறுதல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். ஆங்கிலத்தில் IIS என்றால் International Space Station என்பதின் Acronyms சொல்லாகும். அதாவது அனைத்துலக விண்வெளி நிலையம் என்று பொருளாகும். இதை தமிழில் ஒலியை அடிப்படையாக கொண்டு அவிநி அல்லது அவினி என்று அழைக்கலாம். Acronyms போன்ற ஆங்கில சொல்லாக்க மரபு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை, அப்படியே இல்லையென்றாலும் அந்த முறையில் சொற்களை உருவாக்குவது தவறு இல்லை. இதை பின்பற்றி ISS என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் அவிநி என்ற சொல்லாக்கம் செய்துள்ளனர். இதுபோன்று சரிகமபதநி, அரசியல் கட்சி பெயர்கள்(திமுக, அதிமுக, பாஜக, பாமக) மற்றும் அரசுசார் நிறுவனங்கள் பெயர்கள் (மிவா, செமா) போன்றவற்றை சொல்லலாம். 
  
ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்துதல் அல்லது பதுக்குதல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை வைக்கிறேன். Technology என்ற ஆங்கிலச்சொல்லுக்கு தமிழில் தொழில்நுட்பம் என்று சொல்லுவோம். தற்போது அந்த சொல்லை நுட்பியல் என்று அழைக்கலாம் என்று இராமகி ஐயா சொல்கிறார். (நன்றி- திரு ராம்கி http://valavu.blogspot.in/2006_09_01_archive.html) . TECHNIC என்றால் நுட்பம் TECHNOLOGY என்றால் நுட்பியல் என சொல்லலாம். அதே போல் அலுவலகம் என்ற சொல்லை அலுவம் என்றுசொல்லலாம் எனவும் ஐயா பரிந்துரைக்கிறார்.

பழந்தமிழ் சொல்லாக்கத்தின் எவ்வாறு நடைபெற்றது என ஆய்வதே இத்தொடர் இடுகையின் மூலமாகும். இதை பற்றி பார்ப்பதற்கு முன் புதிய சொற்கள் தொடர்பான மனிதனின் மனோதத்துவ பார்வை ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் (சொல்லாக்கமும் பெயர் வைத்தலும் ஒரு வகையில் ஒன்று தான்) முறையை பார்த்தால், அவர்கள் யாரும் இதுவரை வைக்காத பெயராக, புரியாத பெயராக, சொன்னால்/எழுதினால் அழகாக இருக்கும் பெயராக, ஒலி நீளம் குறைந்த பெயரை தான் தேடி வைப்பதைத்தான் விரும்புகின்றனர் . அதாவது

1) இதுவரை யாரும் பயனபடுத்தாத பெயர்
2) யாருக்கும் புரியாத பெயர்
3) எளிதில் உச்சரிக்க உகந்த பெயர்
4) குறைந்த சொல்நீளம் கொண்ட பெயர்
5) உச்சரிக்க அழகாக இருக்கும் பெயர்

இதுபோன்ற பெயர்கள் நம்முடைய விருப்பமாக, அதை மட்டுமே மனம் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ் மொழிபெயர்ப்பு சொற்களான புகைவண்டி, புகைப்படம், வரைபடம், திரைப்படம், குளிர் பதன பெட்டி போன்ற சொற்களை எப்படி நம்முடைய மனம் ஏற்றுகொள்ளும். எப்படி வழக்கில் பயன்படுத்த மனம் வரும். இந்த சொற்களை சற்று புரியாதது போல் உருமாற்றி, அழகாக, நீளம் குறைந்த வகையில் அவர்களிடம் சொல்லிபாருங்கள் , நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். அது என்ன உருமாற்றுவது? எப்படி செய்வது? இதுபோல் தமிழில் சொற்கள் உள்ளனவா? இந்த முறை சரியானதா? என்று பல்வேறு கேள்விகள் உங்கள் மனதில் எழும். உண்மையில் நாம் வேர்சொற்கள் என அழைக்கும் பெரும்பாலானச் சொற்களும் (சுமார் 75%) இதுபோன்ற முறையில் உருவானவைதான். அவற்றை சற்று நுணுக்கமாக ஆராய்ந்து பகுத்து பார்த்தல் உண்மை விளங்கும். நாம் அவற்றை ஆராய சோம்பேறித்தனப்பாட்டு அச்சொற்களை பகுக்க முடியாத உரிச்சொற்கள் வகையில் சேர்த்து விட்டு தப்பித்து கொள்கிறோம்.

சொற்கள் உருவாக்கபட்டிருக்கும் நுணுக்கங்களை அல்லது புணர்ச்சிகளை பற்றிய முறைக்கு ஆங்கிலத்தில் Word Morphology என்று பெயர் தமிழில் சொல் உருபனியல் என்று அழைக்கப்படுகிறது. Morphing என்றாலே மறைத்தல் என்று பொருள். புதிய சொற்களை உருவாக்க இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை மறைவான முறையில் (அதாவது பொருள் எளிதில் விளங்கா வண்ணம்) இணைத்து உருவாக்குவது தான் இந்த உருபனியல் (Morphology) முறையின் அடிப்படை தத்துவமாகும். மறைத்து வைக்கும் விஷயங்கள் தான் முதலில் நம் கவனத்தை ஈர்க்கும், மனதில் நிலைக்கும். மனிதனின் இந்த மனதத்துவ பண்பை அறிந்ததாலே என்னவோ ஆங்கிலத்தில் இதற்கு Morphology என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் இல்லையா என்று கேட்க வேண்டாம், தமிழில் மட்டும் இல்லை உலக மொழிகள் அனைத்தும் இம்முறை கொண்டு தான் தங்களுடைய சொற்களை குறிப்பாக வேர்சொற்கள் உருவாக்கியுள்ளனர். நம்முடைய மொழியில் இம்முறையில் நான் ஆராய்ந்த சொற்கள் சிலவற்றை இங்கு ஆதாரமாக வைக்கிறேன். இவ்வளவுதானா என கேட்க வேண்டாம், இவைகள் ஒரு மாதிரிகள் (Sample) மட்டுமே. 

குதிரை, புசுனை, கரடி, துப்பாக்கி, பீரங்கி, துப்பாக்கி, அகடூரி(பாம்பு),கண்ணாடி, எண்ணெய், மூலதனம், முகவரி, கற்பு, நாற்காலி, மேசை , சைகை, புகுடி, புகுதி 

இந்த சொற்களுக்கு என்ன பொருள்?, இதில் உள்ள வேர்ச்சொற்கள் என்ன?, அந்த வேர் சொற்கள் எப்படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது, இந்த சொற்களை உருவாக்கியது எப்படி?, என்று கேள்வி கேட்டால் நமக்கு சொல்ல தெரியுமா? - மீறி கேட்டால் என்ன சொல்லுவோம், ஒன்று அவை அனைத்தும் வேர்சொற்கள் பகுத்து பொருள் காண முடியாது என்றோ அல்லது அவை அனைத்தும் உரிச்சொற்கள் பகுக்க முடியாது என்றோ அல்லது

குதிரை – என்றால் ஒரு விலங்கு என்போம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்போம்.
பூசுனை - அது ஒரு வகையான காய் என்போம்.
துப்பாக்கி - என்றால் சுடும் கருவி என்போம்.
பீரங்கி - என்றால் பெரியதாக இருக்கும் சுடக்கூடிய கருவி என்போம்.

மேலேயுள்ள சொற்களை பார்த்தல் வேறு ஏதேனும் பெருள் தெரிகிறதா? நிச்சயம் தெரியாது. சொல்லை பார்த்து பொருள் காணமுடியாத வகையில் சொற்களை இணைத்து, அதன் மூலச்சொற்களை யாருக்கும்  தெரியாவண்ணம் மறைத்தும்/ஒளித்தும் வைத்து, சொல்லாக்கம் செய்யும் முறையை தான் உருபனியல் என்று கூறுகிறேன். மேலேயுள்ள சொற்களில் எவ்வாறு வேர்ச்சொற்களை ஒளித்து வைத்துள்ளனர் என்று கேட்டால் இதோ பின்வரும் பட்டியலை பாருங்கள்.


சொல்

பகுப்பு

பொருள்

குதிரை

குதி + விரை = குதிரை

குதித்து விரைந்து செல்லும் விலங்கு

கரடி

கரம் + அடி = கரடி

கை போன்ற பாதம் உடைய விலங்கு

பூசுணை (பூசணி)

பூசு + சுணை(அரிப்பு பொருள்)       = பூசுணை

சுணை முள்ளால் பூசப்பட்ட காய்

பீரங்கி

பீரும் +அக்கி(நெருப்பு) = பீரங்கி

பீறிக்கொண்டு செல்லும் நெருப்பு

துப்பாக்கி

துப்பல் + அக்கி = துப்பக்கி (துப்பாக்கி)

ஆக்கியை துப்புதல்

அகடூரி(பாம்பு)

அகடு(வயிறு) + ஊரி=அகடூரி

வயிறால் ஊர்ந்து செல்லும் விலங்கு

கண்ணாடி

கண் + ஆடி(Glass) = கண்ணாடி

கண்ணால் பார்க்கும் ஆடி

எண்ணெய்

எள் + நெய் = எண்ணெய்

விதையில் எடுக்கப்படும் திரவம்

மூலதனம்

மூலம் + தனம்(பணம்) = மூலதனம்

மூல பணம்

முகவரி

முகம் + வரி (எழுத்து) = முகவரி

முதன்மையான அடையாள வரிகள்(எழுத்து)

கற்பு

கல் + பண்பு = கல்பு ( கற்பு )

கல் போன்ற பண்பு

நாற்காலி

நால் + கால் = நாற்காலி

நான்கு கால் கொண்ட இருக்கை 

மேசை

மே (மேல்) + சை(கட்டுதல்) = மேசை

உயரமாகக் கட்டப்படும் பொருள்

சைகை

அசை + கை = சைகை

கை அசைத்து சொல்லும் மொழி 

புகுடி

புகும் +அடி = புகுடி

புகும் இடம்

புகுதி

புகும் + பகுதி = புகுதி

புகும் பகுதி

ஈகை

ஈ + கை = ஈகை

ஈ -கொடுத்தல் கை - தன்னிடம் இருப்பதுஇப்போது தெரிகிறதா? ஏன் சொற்களை நம்மைப்போல் அப்படியே இணைத்துச் சொல்லாக்கம் செய்யவில்லை என்று. ஏன் சொல்லின் பொருளை நேரிடையாகச் சொல்லாமல் மறைத்து வைத்துச் சொல்கிறது என்று. காரணம் சொற்கள் மீதான மனிதனின் இயல்பு தான். சொல் என்பது முடிந்தவரை பயன்படுத்தும், உச்சரிக்கும் யாருக்கும் பொருள் விளங்காவண்ணம் இருக்க வேண்டும், அப்போது தான் அச்சொல் பேசுபவரின் மனதில் நிற்கும், எளிதில் பேச்சு வழக்கில் பயன்படுத்துவர். புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிய சொல்லை தான் உருவாக்கவேண்டும். இந்தக் கூற்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் உதாரணமாக

- புகைவண்டி என்ற சொல்லை சொல்லிபாருங்கள், புகைவண்டி என்பது இரண்டு சொற்களாக (புகை, வண்டி) தான் நம்முடைய அறிவுக்கு பொருள்படும். அதுவும் இந்தச் சொல் புகையைக் குறிக்கிறதா அல்லது வண்டியை குறிக்கிறதா எனச் சிந்தித்து , பின்பு இது புகையைக் கக்கி கொண்டு செல்லும் வண்டியை குறிக்கிறது என அறிவு இறுதியாக உள்வாங்கிகொள்ளும். இந்தச் சொல்லை அறிவு உள்வாங்கிக்கொள்ள இரண்டு பொருளறிதல், இரண்டு ஒப்பீடு, கடைசியாகப் புரிதல் என மூன்று செலுத்தங்களை(Process) கொண்டுள்ளது.

- புகைவண்டிக்குப் பதில் சாரனம் என்று அழைத்துப்பாருங்கள், புதிதாக அதே வேளையில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக ஒற்றைச் சொல்லாக உள்ளது. அதுவும் இது தற்காலத்திய கண்டுபிடிப்பு அதற்குப் புதிய சொல்லை உருவாக்கினால் தான் அதைச் சார்த்த மற்ற சொற்களைக் சொல்லாக்கம் செய்யமுடியும். இதில் ஒப்பீடு, புரிதல் என்று செலுத்தங்களுக்கு (Process) வேலையும் இல்லை, குழப்பமும் இல்லை. நாம் பொருளே தெரியாமல் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றை இந்த முறைக்கு ஒப்பாகச் சொல்லலாம்.


(மேலே உள்ள பட்டியலில் இருக்கும் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய சொற்கள் தமிழ் சொற்களே. இது உருது அல்லது பாரசீக மொழியில் இருந்து கடன்வாங்கப்பட்ட சொற்கள் அல்ல)


தொடரும் ......

1 கருத்து:

  1. சிறப்பான கட்டுரை.

    International Space Station சர்வதேச விண்வெளி நிலையம் என்பதே எனக்கு பொருத்தமாகத் தோன்றுகிறது. அனைத்து உலகம் வேறு அனைத்து நாடுகள் என்பது வேறல்லவா? எத்தவொரு அமைப்புரீதியில்லாமல் யாரும் மொழிபெயர்க்கக்கூடிய நிலையில் விக்கிப்பீடியா இருப்பதால் அதனைக் கருத்தில் கொள்ளமுடியாது. எச்சொல் படித்தவுடன் அல்லது வேர்ச் சொல் தெரிந்தவுடன் புரிகிறதோ அச்சொல்லையையே புதிய மொழி பெயர்ப்புகளுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஒரு மொழிபெயர்ப்பையும் கணக்கில் கொள்வது சிறப்பு

    பதிலளிநீக்கு

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...