சனி, 5 அக்டோபர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) இணையத்தில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிச் சற்று சிந்திக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் சொல்லாக்க முறை பழங்காலத்திய சொல்லாக்க முறைகளில் இருந்து முற்றிலும் முரண்பட்டு/ தடம்புரண்டு செல்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அக்கட்டுரையின் ஆசிரியர் பிரபலமான பதிவரா அல்லது தமிழ் சொல்லாக்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவரா என ஆராய்வதைக் காட்டிலும், அவர் கூறும் கருத்தை நாம் ஆராயவேண்டும். உண்மையில் சாதாரணத் தமிழனின் மனதில் இருக்கும் தமிழ் சொற்களைப் பற்றிய ஒரு ஏக்கமாக/எண்ணமாகத் தான் நான் அந்தப் பதிவை பார்க்கிறேன். இதோ அக்கட்டுரையிலிருந்து சில பாகங்கள்

தமிழில் Cricket என்ற சொல்லை மட்டைப்பந்து என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ஆங்கிலத்தில் cricket என்று புதிய சொல் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், நாம் இருக்கும் பழைய சொற்களையே பயன் படுத்தியுள்ளோம். இன்னொரு உதாரணம், பேருந்து என்னும் சொல். இது பெரிய மற்றும் உந்து என்னும் இரு சொற்களில் இருந்து வந்துள்ளது. இதை வழக்கத்தில் பஸ்சு என்றே நாம் பேசி வருகிறோம்.
பண்டைய தமிழகத்தில் இப்படியொரு நிலை இருந்தால் எப்படியிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். மரம், செடி, கொடிகளைப் பார்த்த தமிழன் மண்ணின் கீழ் உள்ள அவற்றின் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். தண்டு, கிளை, இலை, மலர் போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய அவனது முன்னோர்கள் வேர் என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். முதல் முறையாக அவற்றை மண்ணின் கீழ் பார்க்கும் தமிழன் அவற்றிற்கு 'மண் கீழ் கிளை' என்றா பெயரிட்டான்? வேர் என்னும் ஒரு தனிச் சிறப்பான பெயரைத்தானே சூட்டியுள்ளான்? இப்படிச் செய்தல் சந்தேகமின்றி தமிழின் வளர்ச்சியே. மேலும், மண்ணைத் தோண்டி உழுவதற்கான கருவி தமிழனுக்குப் புதிதாக அறிமுகமாகி, அதற்கு அவன் நிலக்கரண்டி என்றோ மண் கரண்டி பெயரிட்டால் எப்படியிருக்கும்? எனினும், நாம் சிறப்பாக கலப்பை என்னும் பெயரைத்தானே கொண்டுள்ளோம்? நன்றி: http://akbmurugan.com
மேற்ச்சொன்னக் கருத்துக்களைத் தான் நானும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வருகிறேன். புதிய கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், பொருட்கள், கருவிகள், கருத்துக்கள், செய்முறைகள் என வரும் போது அவைகளுக்குப் புதிய சொற்களைத் தான் உருவாக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே இரண்டு அல்லது மூன்று சொற்களைச் சேர்த்து எழுதி புதியச்சொற்களை உருவாக்குவது சரியல்ல, அதனால் மொழி சிதைவு தான் உண்டாகும்.

சில தமிழறிஞர்கள் சிரத்தையுடன், ஆர்வமுடன் பழங்காலத்திய சொல்லாக்க முறையில் சொற்களை உருவாக்கினாலும் அச்சொற்களை நிராகரிக்கும் வகையில், அரசும், ஊடகங்களும் அச்சொற்களை முன்வந்து பயன்படுத்தததும், சொல் புரியும்படி இல்லை எனக் குறைக்கூறுவதும், அல்லது கண்டு கொள்ளது அப்படியே விட்டுவிடுவதும் மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவாது. மேலும் அவ்வறிஞர்களின் மனதை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்குப் புண்படுத்தும் பழக்கமும் உள்ளது.

ஒரு தமிழறிஞர் motor என்ற ஆங்கிலச்சொல்லுக்கு முகவு (நகர்வு) என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாக வைத்து முகட்டி, முயத்தர், முயத்தி எனப் புதிய சொற்களை உருவாக்கி கொடுத்தார். மற்றுமொரு அறிஞர் விமானம் என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் பறனை என்ற சொல்லை உருவாக்கினார். என்ன நடந்து? தமிழுலகம் இந்தச்சொற்களைப் பயன்படுத்த முயற்சி செய்ததா? இல்லைவேயில்லை. நான் இங்கு அச்சொற்களைப் பற்றிச் சொல்லும்போது தான் உங்களுக்கே தெரிய வருகிறது.

இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற பிடிவாதம் தான் இன்று தமிழை அழிக்கும் கருவிகளில் ஒன்றாக இணைத்துள்ளது.

"தம்பி motor என்றால் என்ன? மின்சாரத்தால் சுத்துவது அல்லது ஓடுவது....அப்படியா அப்போ மின் என்ற சொல்லை தூக்கி முன்னாடி போடு ஓடு என்ற சொல்லை தூக்கி பின்னாடி போட்டு மின்னோடி என்ற புதிய சொல் உருவாக்கியாச்சு , அப்புறம் Transformer, இது மின்சாரத்தை மற்ற உதவும் கருவி அப்போ மின்மாற்றி என்று பெயர் வை, Transformer Coil என்றால் மின் மாற்றி மின் சுருள் என்று பெயர் வை"

என்று வடிவேல் ஒரு திரைப்படத்தில் பெப்சிக்கும், கொக்க கோலவிற்கும் பெயர் வைப்பது போல் தான் இன்று சொல்லாக்கம் செய்யப்படுகிறது. தமிழில் புதியச்சொற்கள் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் ஊறிப்போய்விட்டது. தமிழுக்கு இன்னொரு பெயர் அழகு, அவ்வழகு தற்போது பின்பற்றும் இதுபோன்ற சொல்லாக்க முறைகளால் மங்கி வருகிறது.

நான் இந்தத் தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வரும் கருத்தை ஆமோதிப்பது பற்றித் தமிழ்ச்சொல்லாக்க ஆர்வலர்கள்/அறிஞர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடினாலும், இதுவரை இரண்டு/மூன்றுச் சொற்களை மொழிமாற்றி இணைத்தே சொல்லாக்கம் செய்த அவர்களுக்கு நான் வலியுறுத்தும் சொல்லாக்க முறையை எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதானக் காரியமல்ல என்பதை அறிவேன். மேலும் இவர் யார்? சொல்லும் கருத்து சரிதானா?, இது போன்றதொரு கருத்தை இதுவரை மொழி அறிஞர்கள் எவரும் வலியுறுத்தவில்லையே?, தமிழைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? எனப் பல கேள்விகள் அவர்கள் மனதை ஆக்கிரமிக்கும் என்பதையும் அறிவேன்.

நான் எந்தவொரு புதுச்சொல்லாக்க முறைகளையும் உருவாக்கவில்லை, அப்படி உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை. நம் முன்னோர்கள் பின்பற்றிய சொல்லாக்க முறையை நாமும் பின்பற்றி, அவர்கள் சிறப்புடன் தமிழை நம்மிடம் பத்திரமாகக் கொடுத்தது சென்றதைப்போல், நாமும் நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு கொடுக்கவேண்டுமென்று தான் வலியுறுத்துகிறேன். பழங்காலத்திய சொல்லாக்க முறையில் இருந்து தற்காலத்திய சொல்லாக்க முறை தடம் மாறி செல்வதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்றுதான் வேண்டுகிறேன். தமிழின் சிறப்புச் சீரழிவதை தடுக்க வேண்டும் என வேண்டுகிறேன். தற்போது நாம் கடைபிடிக்கும் சொல்லாக்க முறையால்தான் எந்தவொரு புதியச்சொல்லையும் பேச்சு வழக்கில் கொண்டு வரமுடியவில்லை எனக் கூறுகிறேன்.

அரசாங்கம் தங்களின் அரசியல் மதிப்பு மக்களிடத்தில் குறையும் போது மாட்டுமே தமிழுக்குத் தொண்டாற்றுவது போல் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பை உயர்த்தும் கருவியாக மட்டுமே தமிழைப் பயன்படுத்தப்படுகிறது. அவர்களால் தமிழுக்கு ஏதேனும் நன்மைகள் நடக்கும் என ஆசைபட்டால், நம்மைப்போல் ஒரு முட்டாள்கள் உலகத்தில் இருக்க முடியாது.

 நான் அறிவுறுத்தும் கருத்துக்களில், பழங்காலத்திய சொல்லாக்க முறைகளைப் பற்றிய சொற்ப்பகுப்பு ஆதாரங்களைக் கட்டுரை பாகம்-2 ல் அட்டவனைப்படுத்தியுள்ளேன். மேலும் சில சொற்களை இங்கு கொடுக்கிறேன்.
 
சொல்பகுப்புபொருள்
எக்காளம்எக்கு(பெரிய) + காளம்(சப்தம்)பெரிய சப்தம்
மின்சாரம்மின் + சாரம் (சக்தி)மின் ஆற்றல்
கோடாரிகோடல்(உடைத்தல்) + அரி(பிள-த்தல்)உடைத்து பிளக்கும் கருவி
தக்கைதக்க(தகுந்த) + கை (Bar)தகுந்த பாகம் (Suitable Piece)
சுளகு(முறம்)சுள்(மென்மை) + உமெல்லிய தானியத்தை பிரிக்கும் பொருள்
ஊரா (ஊர்பசு)ஊர் + ஆ (பசு)ஊருக்குப் பொதுவான பசு
உதாரணம் உதவு + காரணம் உதவும் காரணம்
கடப்பாரைகடப்பு + ஆரை (அச்சு மரம்) பொருளைக்  கடத்த உதவும் கை மரம் (Bar)

நான் வலியுறுத்தும் கருத்துக்கு எவ்வளவு ஆதாரங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுத்தாலும் தமிழ் ஆர்வலர்கள்/அறிஞர்கள் முழு மனதுடன் அதைப்பற்றி மேலும் ஆராயச் சிறிது காலம் பிடிக்கும் என்பதை அறிவேன், காரணம்
  1. தற்போது பின்பற்றி வரும் மொழிப்பெயர்ப்பு சொல்லாக்க முறையைத்  தவறு என்பது.
  2. நடைமுறையிலுள்ள  சொல்லாக்க முறையிலிருந்து மாற மனமில்லாதது.
  3. சொல்லைப் பார்த்தால் அதன் பொருள் விளங்க வேண்டும் என்ற எண்ணமிருப்பது.
  4. மொழியியல் ஆர்வலர்களும் எவரும் இதுவரை சொல்லாத முறை என்பது.
  5. ஆங்கிலத்தில் உள்ள சொல்லை வரிக்குவரி அப்படியே மொழிமாற்றம் செய்து புதியச்சொல்லை உருவாக்கிவிட்டால், அனாவசியமாக யாருக்கும் பதிலோ, விளக்கமோ சொல்லத் தேவையில்லை என்ற எண்ணம்.
  6. ஆங்கில மொழியிடம் மனதளவில் அடங்கிப் போன மனம், இப்படியெல்லாம் செய்வதால் என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம்.
  7. எல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழை வளர்க்க வேண்டிய அரசாங்கமே தமிழின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாத போது நமக்கு மட்டும் என்ன அக்கறை வேண்டியிருக்கு என்ற நியமான எண்ணம்.
தமிழ்ச்சொற்கள் வளத்தில், அறிஞர்களின் பங்களிப்பை விடச் சாதாரண மக்களின் பங்களிப்பே முதன்மையானது. அவர்கள் தான் பெருவாரியான தமிழ்ச்சொற்களை மொழிக்கு அளித்துத் தமிழை வளமைப்படுத்தியவர்கள். அப்படி என்ன அறிஞர்களுக்குத் தெரியாத சொல்லாக்கம் செய்து விட்டான் இந்தப் படிக்காத பாமர கிராமத்து தமிழன்? கிராமத்தில் தான் தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு புதிய பொருட்களுக்கும் தமிழில் எதாவது ஒரு பெயர் கொண்டு அழைக்கும் முதல் நபர்களாக அவர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தான் வேறுமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தாங்கள் குற்றம் செய்வது போல் பார்க்கும் மனம் படைத்தவர்கள். Soap என்பதைச் சவக்காரக் கட்டி என்று அழைத்தவர்கள். அப்பங்களிப்பு எப்போது ஆங்கிலம் அவர்களைத் தாக்கத் தொடங்கியதோ, அன்றே முற்றிலும் நின்று போய் விட்டது. அண்மை காலமாக ஊடகத்துறையின் கலாச்சாரத் தாக்கத்தினால் அவர்களின் சொல் பங்களிப்பு முற்றிலும் சுழியமாகி விட்டது. இருப்பினும் தமிழ்ச்சொல்லாக்க முறைகளுக்கு உண்மையான ஊற்றுகண் அவர்களே என்பதை மறுக்கமுடியாது.

விவசாயத்தில் பயிருடன் சேர்ந்து வளரும் களையை நீக்க பயன்படும் கருவிக்குக் களைக் கொத்தி என்று பெயர். இது கிராமப்புறங்களில் களாத்தி என்றே அழைக்கப்படுகிறது. களைக்கொத்தி என்று அழைப்பது தானே சரி! ஏன் களாத்தி என்று அழைக்கப்படுகிறது ? என்று நம் மனம் கேள்வி எழுப்பும்.

முதலில் களைக்கொத்தி என்று தான் பேச்சுவழக்கில் பயன்படுத்தினர். காலப்போக்கில் அச்சொல்லை சுருக்கி உச்சரிக்க எதுவாகக் களைக்கொத்தி > கள கொத்தி > களாத்தி என்றானது. களை என்ற சொல்லில் இருக்கும் 'ஐ' எனும் உயிர் ஒலியும் கொத்தி எனும் சொல்லில் இருக்கும் 'ஒ' எனும் உயிர் ஒலியும் பேச்சு வழக்கில் மங்கி களாத்தி என்ற புதியச்சொல் உருவாகியுள்ளது.
  1. பேச்சு வழக்கில் களைக்கொத்தி என்று அப்படியே நம்முடைய நாக்கு அழைக்க மறுப்பது ஏன்?
  2. பேச ஏதுவாகக் களைக்கொத்தி என்ற சொல் இயற்கையாகக் களாத்தியானது ஏன்?
  3. இன்று களாத்தி என்ற சொல் மற்றவர்களுக்குப் புரியும்படி அமையாதது ஏன்?
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், ஒரு சொல்லை பேச்சுவழக்கில் பயன்படுத்தும் போது அச்சொல் காலப்போக்கில் குறைவான ஒலி நீளத்தில் உச்சரிக்க எதுவாக, திரிபு அடைந்து, புரியாத வடிவில் புதிய சொல்லாக மாறும் முறைதான் இயற்கையான சொல்லாக்க முறை. இதையொட்டியே அனைத்து மொழி சொற்களும் உருவாக்கப்பட்டுள்ளது எனச்சொல்லலாம். இது தான் இயற்கையான சொல்லாக்க முறை.

இப்போது புரிகிறதா? நான் ஏதும் புதிதாக வலியுறுத்தவில்லை என்று. இச்சொற்களைத் தான் நம் இலக்கண நூல்கள் உரிச்சொல் என்ற கட்டத்திற்குள் கொண்டுவருகின்றன. எப்படி உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கமுடியாத / பகுக்க முடியாத சொற்கள் தான் உரிச்சொற்கள் என்கிறோம்.

இதில் களாத்தி என்பது புதிய சொல், களை கொத்தி என்பது விளக்கச்சொல் எனலாம். ஆனால் நம்முடைய தற்காலச் சொல்லாக்கம், விளக்கச்சொல்லை புதிய சொல் என அழைக்கிறது.

இதோ மேலும் சில இயற்கையாக உருவான சொற்களை ஆதாரமாக வைக்கிறேன்.
சொல்விளக்க சொல் பகுப்புபொருள்
வாப்பட்டிவாய்பெட்டிவாய் + பெட்டிதானியங்கள் சிதறாமல் இருக்க உரலின் வாயில் வைக்கப்படும் கூம்புப்பெட்டி
சீயக்காய்சிகைக்காய்சிகை + காய்தலைகுளிக்கும் போது அழுக்கு நீக்கும் ஒருவகைப் பொடி
வந்தாச்சுவந்தாயிற்றுவந்து + ஆயிற்றுவந்து விட்டேன் எனும் வினையை குறிக்கும் சொல்
செஞ்சுட்டுசெய்துவிட்டுசெய்து + விட்டுமுடிந்து விட்டது எனும் வினையைக் குறிக்கும் சொல்
எப்பவும்எப்பொழுதும்எந்த + பொழுதும்எந்த நேரமும்
வந்திடுவந்துவிடுவந்து + விடுவந்து விடு எனும் வினையைக் குறிக்கும் சொல்
மம்மட்டிமண்வெட்டிமண் + வெட்டிமண்ணை வெட்டப் பயன்படும் கருவி
கறுக்கருவால்கதிர் அறுக்கும் அருவாள்கதிர் + அருவாள்நெற்கதிரை அறுவடை செய்யும் கை கருவி
வியக்கூர்வியர்கூர்வியர்வை + கூர்ஒருவகைத் தோல் ஒவ்வாமை
உலக்கைஉரல்கைஉரல் + கை (bar)உரலில் தானியத்தைக்  குத்த பயன்படும் கம்பு
கலப்பைகலக்கைகலக்கும் + கைநிலத்தைக் கலக்க பயன்படும் கருவி
விளையாட்டுவினையாட்டுவினை + ஆட்டுவினையைக் கொண்டு ஆட்டம்
பிரண்டைபிரண்டுபிரல் + தண்டுபிரல் வகைத் தண்டு கொடி

மேலே உள்ள சொற்கள் சிலவற்றை (வந்தாச்சு, செஞ்சுட்டு, எப்பவும், வந்துடு) நாம் கொச்சை சொற்கள் எனச் சொல்வதுண்டு. அவை கொச்சை சொற்கள் அல்ல, நான் மேற்கூறிய முறையில், தற்காலப் பேச்சு வழக்கிற்கு ஏற்ப இயற்கையாக உருவான புதிய சொற்கள் எனச் சொல்வது தான் சரி.

"இதுபோன்ற கருத்துக்களை வலியுறுத்தும் நீங்கள் எதாவது புதிய சொற்களை உருவாக்கி வைத்துள்ளீர்களா?" என்று கேட்பது சரிதான். நிறையப் புதுச் சொற்களை உருவாக்கி வைத்துள்ளேன், அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...