கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறை நிறுவனங்கள், சந்தைகள் போன்றவை வளர்ந்தாலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தான் பெரிய அளவில் வளர்ச்சியும் கண்டது நல்ல பணமும் புரண்டது.ஆனால் தற்பொழுது Real Estate விலைவாசியை பார்க்கும் போது சென்னையில் நடுத்தர சம்பள மக்கள் தங்களுக்கென ஒரு மனையோ அல்லது இடங்களோ வாங்குவது என்பது முடியாத காரியமாகி விட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ, வெளியில் கடன் வாங்கியோ இடத்தில் முதலீடு செய்து பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஒரு சாராரின் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
சென்னையில் சொத்துக்களை வாங்குவதாக இருந்தால் இந்த பதிவை படித்துவிட்டு பின்பு முடிவு செய்யுங்கள். சென்னை Real Estate துறை உண்மையில் வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
சற்று சிந்தித்து பாருங்கள் - வங்கியில் லட்ச கணக்கில் கடன்வாங்கி அதை பல ஆண்டுகளாக உத்திரவாதம் இல்லாத வேலையை வைத்து கொண்டு வங்கி கடனை திரும்ப அடைக்க முடியுமா? - இதற்கு உங்களால் என்ன சொல்லமுடியுமா?
1) தற்போதுள்ள சூழ்நிலையில் மனைகளின் சந்தை விலைப்படி, நடுத்தர சம்பளம் வாங்கும் வகுப்பினர் சொத்துகளையோ, நிலம் அல்லது வீடுகளோ வாங்க முடியும் என்றால் அது சென்னையின் புறநகர்களில் மற்றும் எல்லைகளில் மட்டுமே. அவ்வாறு வாங்கினாலும் அங்கிருந்து வேலை நிமிர்தமாகவோ,அன்றாட தேவைகளுக்காகவோ அல்லது பொருள்கள் வாங்குவதற்காகவோ நீங்கள் கடிப்பாக சென்னையின் மைய பகுதிக்கு போக்குவரத்து கெடுபிடிகளை கடந்து நேரத்தை விரயமாக்கி தான் வரவேண்டும். அதனால் ஏற்படும் கால விரயம் மற்றும் ஆற்றல் விரயத்தை சற்று எண்ணி பார்க்க வேண்டும்.
2) பெரும்பாலான Real Estate நிறுவனங்கள் தனி மனைகளை விற்று கிடக்கும் லாபத்தைவிட, அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகம் என்பதால் அவர்கள் அவற்றை மட்டுமே கட்டி விற்க விரும்புகின்றனர் - ஏற்கனவே சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு நடுவில் உங்கள் குடியிருப்பின் தண்ணீர் தேவைக்காக மாதம் மாதம் செலவு செய்ய முடியுமா ?
3) சரி நீங்கள் குடியிருக்கவோ, வாடகைக்கோ விடவோ மனைகளை/இடங்களை வாங்கவில்லை, ஒரு முதலீடு போல் வாங்கிபோட்டு பின்பு நல்ல விலைக்கு விற்கலாம் என்று வாங்குகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். - சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொத்து வாங்கியவர்கள் வேண்டுமென்றால் சொத்தின் சந்தை மதிப்பு ஏறக்ககுறைய 20 இருந்து 300 % இருக்கும் போது விற்கலாம்.
ஆனால் வங்கிகளில் கடன் பெற்று சொத்துக்களை வாங்குவோர், தற்போதுள்ள வங்கிகளின் வட்டி விகிதபடி கடனை திருப்பி அடைக்கும் போது வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 10-12% பணத்தை கூடுதலாக கட்டி தொலைய வேண்டும். ஒருவேளை வருங்காலங்களில் சொத்தின் ஆண்டு மதிப்பு 10% கீழ் குறைந்தால் கடன் கட்டிய பணத்தின் மதிப்பு வாங்கிய சொத்தின் மதிப்பு விட அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு மேலும் நட்டத்தையே ஏற்படுத்தும்.
4) நாள்தோறும் அதிகரித்து வரும் Real Estate மோசடி புகார்கள்/வழக்குகள் - எவ்வளவு புகார்களுக்கு/வழக்குகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டது? சொல்லுங்கள் பார்ப்போம்.
5) தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சி காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு (சென்னை) வேலை தேடி/செய்து வரும் இளைஞர்களுக்கு வீட்டை கட்டி வாடகை விடுவதின் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று பலர் சொத்துக்களை வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு - எவ்வளவு த.நு (IT) நிறுவனங்கள் தாங்கள் வேலைக்காக எடுத்த நபர்களுக்கு 6 மாதங்கள்/ஒரு வருடங்கள் ஆகியும் இன்னமும் நியமன ஆணை(Appointment Order) வழங்காமல் இருப்பது உங்களுக்கு தெரியுமா?, பல நிறுவனகள் இதற்கு மேல் ஆட்கள் தேவை இல்லை என்று ஆட்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது தெரியுமா?, அமெரிக்காவை மட்டுமே பெரும்பாலும் நம்பி இருக்கும் த.நு (IT) துறையில் தற்போது நிலவும் ஆணைகளின்(Order) மந்த நிலை காரணமாக தினமும் பலரும் வேலை இழப்பதும், நீக்கபடுவதும் தொடர்ந்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? , கூடிய விரைவில் இந்த துறை சார்ந்த வேலையில்லா/வேலையிழந்த பணியாளர்கள் அல்லது பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க போவது தெரியுமா?
6) புதிதாக வேலையில் சேர்பவர்கள் கூட வங்கியில் கடன் வாங்கி சென்னையில் வீடு மனைகளை வாங்கலாம் என்று சொல்கிறார்கள்(தினமும் பல விளம்பரங்களை தொலைகாட்சிகளிலும், சாலைகளிலும் பார்க்கலாம்) - சென்னையின் நிலவும் வாழ்க்கை செலவீனத்தில் மாதம் சராசரியாக Rs 20000 வருமானம் வாங்கும் புதியவர்கள் எப்படி வாழ்கையை சமாளித்து கொண்டு மாதமாதம் Rs 10000 வங்கி கடன் தவணை கட்டமுடியும். அப்படியே வாங்கலாம் என்று நினைத்தாலும் நாம் விருப்பத்திற்கு ஏற்ப வாங்க முடியுமா என்றால் முடியாது. மாத தவணை என்ற பெயரில் வரும் பூதம் மாதமாதம் உங்களை கதற வைத்துவிடும்.
சரி இனிவரும் காலங்களில் Real Estate துறையில் என்ன நடக்கும், விலைகள் குறையுமா?
சொல்ல முடியாது. இந்தியாவில் இந்த துறை சரியான முறையில் சீற்படுத்தபடவில்லை. இந்த துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு எந்த படிப்போ, அனுபவமோ, அறிவோ தேவை இல்லை, அரசியல் பலம் மட்டும் இருந்தால் போது எதையும் செய்யலாம். இப்போது சென்னையில் சில சாதாரண வீடுகளே மாளிகைகள்(Villa) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பேர்வழிகள் பெரும்பாலும் கணக்கில் வராத கள்ள பணத்தை இந்த தொழில் முதலீடு செய்வதாலும், சாதரணமாகவே வசதி படைத்தவர்களாக இருப்பதாலும், நாம் சொல்லும் விலைக்கு வேறுவழியில்லை என்று மக்கள் வாங்க முற்படும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்கள், மோசமான வாழ்க்கை நிலை, அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் பற்றாகுறை, மின்சார பற்றாகுறை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகள், Real Estate அதிபர்களின் பேராசை, அரசியல் தலைகளின் தலையீடு போன்ற காரணங்களால் வீடோ, மனைகளோ,சொத்துக்களோ இப்போதைக்கு சென்னையில் வாங்குவது என்பது நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக