சனி, 17 ஆகஸ்ட், 2013

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு




தாயின் கருவறையில் இருக்கும் சிசு தாயின் ஒவ்வொரு செயல்களையும் உணர்ந்து அதன்படியே தன்னை தயார்செய்துகொள்ளும் என்பது அறிவியல்பூர்வமாக நிருபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் தான் கருவுற்ற தாய்மார்கள் எப்போதும் நல்லவைகளை கேட்க வேண்டும், நல்லதை நினைக்க வேண்டும், நல்லதை மட்டுமே அவர்களிடம் நாம் பேச வேண்டும், சண்டையிட கூடாது, இறை செயல்களில் ஈடுபட கொள்ளவேண்டும், கலைகளை ரசிக்க வேண்டும், கணிதம் போடவேண்டும், சில மாதங்களுக்கு பிறகு அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும், அனைத்துவகையான உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மொத்தத்தில் கருவில் இருக்கும் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனத் தாய் ஆசைபடுகிறாளோ அப்படியெல்லாம் முதலில் அவள் இருக்க வேண்டும் என்பார்கள்.

தன் தாய் பேசும் மொழியைத் தான் கருவில் இருக்கும் சிசு முதலில் கேட்கிறது. அது தமிழாக இருந்தாலும் சரி வேறு எந்த மொழியாக இருந்தாலும் சரி. மேலும் அதே மொழியில் தாயின் செயல்பாடுகள் (பேச்சு, சிந்தனை, அறிவு, படிப்பு) அமையும்போது அதைப் பின்பற்றியே குழந்தையின் செயல்பாடுகளும் அமைகிறது. அதனால் தான் 'தாயைப்போலப் பிள்ளை நூலைப்போலச் சேலை' என்ற பழமொழியும் தோன்றியது.

எனவே ஒவ்வொருடைய இயந்திர (உயிர்) மொழி என்பது அவர்களின் தாய்பேசும் மொழியே. அதாவது தாய்மொழியாகும்.

ஒருவர் மற்றவரிடம் எந்தவொரு மொழியில் தன கருத்தைத் தெரிவிக்க விரும்பினாலும் அவர் பேச விரும்பும் தகவல் அவருடைய தாய் மொழியில் தான் அவரின் மனதில் தோன்றும், பிறகுதான் அந்தக் கருத்து பேசும் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றம் அடைந்து நாவில் பேச்சாக வெளிவரும். இங்கு மனம் என்பது உயிர்மொழி, பேச்சு என்பது செயல். நம்முடைய ஒவ்வொரு கருத்து பரிமாற்றங்களும் உயிர்மொழியில் தான் நடைபெறுகின்றன. அதேபோல் ஒருவர் சிந்திப்பதும், படிப்பதும், எழுதுவது என அனைத்து செயல்களின் மூலமே உயிர்மொழி தான்.

நம் மனம் உயிர்மொழியில் ஒரு சிரிப்புத் துணுக்கு கேட்டால் சுவையறிந்து தானாகச் சிரிக்கும். அதே சிரிப்புத் துணுக்கை வேறுமொழியில் கேட்டால் நமட்டு சிரிப்பு மட்டுமே வரும் அல்லது சிரிக்க மனம் விரும்பாது. உணர்வுகளைத் தூண்டிவிடுவது தாய்மொழி. உணர்வு மட்டுமின்றி சிந்தனை, செயல், அறிவு, புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றை திறன்பட செயல்பட மற்றும் தூண்டிவிட உறுதுணையாக அமைவது உயிர்மொழி - இயந்திரமொழி எனப் பெயர்கொண்ட அவரவர் தாய்மொழி.

கணினியில் C++, Csharp, VB, JAVA, Perl போன்ற மொழிகளில் நிரல்களை(Program) எழுதினாலும் அது இயங்கும்போது கணனியின் CPU விற்கு இயந்திர மொழியாக (Machine Language) மாற்றமடைந்து தான் கணினிக்கு இயக்கக் கட்டளைகளையிடும். இங்கு C++, C#, VB, JAVA, Perl போன்றவை நம்மைச் சுற்றியிருக்கும் ஆங்கிலம், அரபிக், பிரஞ்சு, லத்தின் போன்றவை. இயந்திர மொழியாக (Machine Language) என்பது அவரவர் தாய்மொழி.

கணினியும் மனிதனும் செயல்பாடுகளில் ஒன்று தான். மனிதனின் மூளைக்கு அறிவு எப்படி கட்டளைகளைப் பிறப்பிக்கிறதோ அதுபோல் நிரல்கள் (Program) கணினிக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. கணனியின் நிரல்களை கணினிக்குப் புரியும்படி மாற்றிகொடுப்பது தான் Machine Language இன் வேலை. Machine Language இல்லாமல் கணினி இயங்காது. இதேபோலத் தான் மனிதன் பழமொழிகளைப் பேசினாலும், படித்தாலும் அந்த மொழிகளை அவனுடைய தாய்மொழி (Machine Language) மட்டுமே அவனுடைய அறிவுக்கு புரியும்படி மாற்றிக்கொடுத்து அவனைச் செயாலாற்ற வைக்கும்.

Machine Language -தாய்மொழிக்கு பதில் அந்த இடத்தில் வேறு எந்த மொழிகள் இருந்தாலும் கணினியும் - மனிதனும் வெறும் கல்லைப் போன்றவர்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தலைமுறையில் தமிழர்கள் பல்வேறு துறைகள் குறிப்பாக நுட்பியல் (Technology) துறையில் நல்ல பெயரை உலகளவில் பெற்றுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் தன் நிறுவனத்தை வேறு நாடுகளுக்கு மாற்றுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னைக்கு தான் மாற்றுவேன் என்று சொன்னது தமிழர்களின் நுட்பியல் அறிவுத்திறனே காரணம். பெரிய நிறுவனங்கள் இன்றும் தென்னிந்திய பணியாளர்கள் என்றால் விரும்பிப் பணியில் சேர்ப்பதற்கு காரணம் நாம் தான் என்பது பலருக்கும் தெரியாது. நம்முடைய இந்த உயர்வான நிலைக்குக் காரணம் நாம் தாய்மொழியில் கல்வி கற்றது தான்.

நம்மை இந்த அளவிற்கு கொண்டுவந்து விட்ட தமிழை நாம் இன்று மறந்து விட்டுத் தன் பிள்ளைகள் வாய்வழிய ஆங்கிலம் பேசினால் தான் வாழ்கையில் முன்னேற முடியும் என்று நாமே கனவுகொண்டு இன்று ஆங்கிலவழி கல்வியை நம் பிள்ளைகளுக்குத் திணித்து வருகிறோம். நம்முடை உடல், சிந்தனை, செயல், அறிவு போன்றவை இயற்கையில் தமிழ் என்று பச்சை குத்தி இருக்கும்போது அந்த இயற்கையை மாற்ற முயற்சி செய்கிறோம். இயற்கையை மாற்ற முயலும் நாம் மூடர் என்பதை அறியாமல் இந்தத் தவறை செய்துவருகிறோம்.

மனிதன் தன் தாய்மொழியில் கல்வி பயிலுவது தான் சிறப்பு எனத் தமிழர்களின் கனவுகாரன் ஆங்கிலேயன் பல ஆய்வுகளைச் செய்து சொன்னாலும், அதை ஒத்துகொள்ள மறுக்கிறோம். இன்று உலகில் முன்னணி நாடுகளான ஜப்பான், சீனா, ரஷ்ய, ஜெர்மன், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் தாய்மொழியிலேயே படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அதனால் தான் இன்று அவர்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்தவர்களாகத் திகழ்கின்றனர். உலகில் சிறந்த விருதுகள், பரிசுகள் (நோபல்), அங்கீகாரம், முக்கியத்துவம், போன்றவற்றை அவர்கள் பெற முடிகிறது. பற்பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துத் தங்கள் அறிவை மற்ற நாட்டினர் மெச்சும் படி வாழ்கின்றனர்,

ஆனால் நாம் ஆங்கிலம் தான் நம் உயிர்மொழி போல் நினைத்துகொண்டு நம் பிள்ளைகளை வழுகட்டாயமாக ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டு அழகு பார்க்கிறோம். இப்படி அழகு பார்த்துப் பார்த்து அவர்களின் சிந்தனை மற்றும் கற்பனை திறனைக் குழிதோண்டி புதைத்து வருகிறோம். தொழில் துறை எனும் கடலில் நீந்த அறிவு, சிந்தனை, கற்பனை என்னும் மூன்றும் அவசியம், அது இல்லாத எந்த ஒரு சமுகத்தையும் உலகம் ஏற்காது. இதுதான் ஆங்கிலவழி கல்வி பயிலும் நம் சந்ததியினர் அவர்கள் காலங்களில் சந்திக்க போகும் மிகபெரியபிரச்சனையாக மாறப்போகிறது.

ஆங்கிலமே தெரியாத நம் குழந்தைகளை ஆங்கிலத்தின் மூலமே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு. கல்வியில் ஆரம்ப நிலை எனும் அந்த முதல் 6 ஆண்டுகளில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலத்தில் கல்வியை புகட்டுகிறோம். அவர்கள் கல்வியை கற்பார்களா? அல்லது ஆங்கிலத்தை கற்பார்களா?. இந்தக் குழப்பத்தாலேயே அவர்கள் புரிந்து படிப்பதற்கு பதில் சிந்தனையை மழுங்கடிக்கும் மனப்பாடம் எனும் முறையைக் கடைப்பிடிகின்றனர்.

தனக்கு ஆங்கிலம் பேசப் படிக்க தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகத் தன் பிள்ளைகளை இப்படி தான் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து தலையைப் பிடித்து அழுத்துவது, தங்கள் பிள்ளைகள் வாழ்கையில் முதன்மையாக வர வேண்டும் என்று எண்ணம் கொண்டே எனச் சொன்னாலும் உண்மையில் அவர்கள் வாய்நிறைய ஆங்கிலம் பேசும் கீழ்மட்ட வேலைசெய்யும் சாதாரண ஊழியராக வந்தாலும் பெருமையே எனச் சொல்வதுபோல உள்ளது.

2 கருத்துகள்:

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...