சனி, 26 டிசம்பர், 2015

தமிழ் ஆங்கிலம் போல ஏற்றம் பெற ஒரேயொரு எளிய வழிஒருவர் ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் பேசினால் தமிழனிடம் சொத்தை எழுதி வாங்கலாம். அதே ஒரு மணிநேரம் ஒரு வெள்ளைக்காரன் பேசினால் தமிழனிடம் மொத்தத்தையும் எழுதி வாங்கலாம். இந்த ஒப்பு எதற்கு என்றால் அந்தளவிற்கு ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது.ஆமாம் இன்று ஆங்கிலம் என்பது உயிர் என்ற அளவிலும், தமிழ் என்பது போனால் போகட்டும் மயிர் என்ற அளவிலும் உருமாறி தமிழனின் உயிர் அணுவில் கலந்துவிட்டது. உலகிலேயே தான் பேசும் மொழியைக் கேவலம் எனச் சொல்லும் ஒரே இனம் எனக்குத் தெரிந்து தமிழ் இனம் தான். அதேபோல வெட்கமே இல்லாமல் மற்ற மொழியினரின் மொழியை பெருமையாகப் பயன்படுத்தும் ஒரே இனமும் நம்முடையது தான்.

நம்முடைய மொழியில் குறைபாடுகள் உள்ளன. அதனால் நான் ஆங்கிலத்தை நாடுவது தவறில்லை என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்வது கேட்கிறது. தன் வீட்டில் உள்ள வசதி போதாது என்றால் அதைத் தனது தேவைகேற்ப உயர்த்திக்கொள்ள தெரிந்தவன் திறமைசாலி, அவனைத் தான் உலகம் மதிக்கும். தன் வீட்டில் உள்ள வசதி தனது தேவைக்குப் போதாது என்று கூச்சம் இல்லாமல் எதிர்வீட்டில் கையேந்தும் யாரும் வெறுமைசாலிகளே. அவனை உலகம் மதிக்காது.

நம்முடைய மொழியில் உள்ள குறைபாடுகளைக் கலைந்து மேம்படுத்த யார் வருவார்? கன்னடனா வருவான்? இல்லை தெலுங்கனா வருவானா? நாம் தான் முன்வர வேண்டும். நம் வீட்டில் உள்ள வசதிகள் போதாது என்றால் நாம் தான் செப்பனிட வேண்டும். வசதியில்லை என்று பிறரிடம் கையேந்துவது பிச்சை எடுப்பது போன்றல்லவா?

எல்லா மொழிகளிலும் குறைகள் உண்டு, இல்லையென மறுக்க முடியாது. ஆங்கிலத்திலும் குறைகள் இருந்தன, ஜெர்மனிய மொழியிலும் குறைகள் இருந்தன, ஹீப்ரு மொழியும் குறைகள் இருந்தன. குறைகளுள்ள மொழி எனக்கெதற்கு என நம்மைப் போல ஆங்கிலேயரும், ஜெர்மானியரும், யூதர்களும் பிறமொழிகளை தேடி சென்றிருந்தால் இந்நேரம் ஆங்கிலம் அகிலத்தை ஆளாது, ஜெர்மானிய மொழி கண்டத்தை ஆளாது, ஹிப்ரு மீண்டும் உயிர் பெற்றிருக்காது.

எனக்குத் தமிழ் வளர ஆசை தான், ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பவர்களும் உண்டு, எல்லோராலும் முடியுமா எனக் கேட்பவர்களும் உண்டு, எனக்குப் பொருளாதாரம் இல்லை முடியுமா எனக் கேட்பவர்களும் உண்டு,

மலைக்க வேண்டாம் எளிய வழி தான், இதைப் பின்பற்றினால் தமிழ் தானாக மேம்படும், கூடவே உங்கள் பிள்ளைகளின் வாழ்வும், திறனும் ஏற்றமடையும். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் உலகில் தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக வளரும், தமிழன் உலகின் முதன்மை இனங்களான யூதர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள் வரிசையில் சேர்ந்துவிடுவான்.

என்ன வழி ?

உங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வையுங்கள் அது போதும். இது எல்லோராலும் முடிந்த ஒன்று தான். தமிழ் தானாக வளரும், தமிழனும் தானாக வளருவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...