வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

துப்பாக்கி மற்றும் பீரங்கி தமிழ்ச்சொற்களேதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.

9-அம் நூற்றாண்டில் வெடிமருந்துகளை கண்டுபிடித்து, மூங்கிலில் செய்யப்பட எடுப்பு துப்பாக்கிகளை (Portable Gun) சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெடிமருந்துகள் மற்றும் வெடிகலன் நுட்பங்கள் சுமார் 15-அம் நூற்றாண்டுகள் வாக்கில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். அதாவது போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன். இந்த நுட்பத்தை கொண்டு புணையப்பட்ட பல்வேறு ஆயுதங்களை டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர்களால் பேரின்போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

துப்பாக்கி நுட்பம் என்பது ஒரு தாழறையில் (சிறிய அறை) வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தை வெடிக்கவைப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தத்தை ஒரு உலோகக்குண்டின் மீது சடுதியாக (Sudden) செலுத்தும்போது குண்டானது அதிவேகத்தில் வெளியேறி இலக்கைத் தாக்குவதாகும். இதே நுட்பம் தான் பீரங்கியிலும் பயன்படுத்தப்படுகிறது.

துப்பாக்கியில் சராசரியாக 2.5 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைக் குறிபார்த்து சுட முடியும். பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அளவு பெரியது, இதன் மூலம் சுமார் 30 - 40 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைத் தாக்க முடியும்.
வரலாற்றில் தமிழர்களுக்கு வெடிநுட்பக்கருவிகள் என்பது புதியது. தமிழில் துப்பாக்கி என்ற சொல் துருக்கி மொழியிலிருந்து வந்ததாக சொல்வார்கள், காரணம் துருக்கி மொழியில் துப்பாஞ்சி என்றால் Gun என்று பொருள்.துப்பாக்கி பிறமொழிச்சொல் என்பதால், பீரங்கியையும் தமிழில்லை என்று சொல்வோரும் உண்டு. 

ஆனால் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய இரண்டு சொற்களின் ஒலிப்பின் அடிப்படையில் அதன் வேர்ச்சொற்களை ஆய்ந்து பார்க்கும்போது அவை இயல்பாகவே துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆயுதங்களின் இயங்கு நுட்பத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்களாக உள்ளன. 

எப்படி?

முன்பு கூறியதுபோல துப்பாக்கி நுட்பத்தில் நெருப்புக் குண்டு குறைந்த தொலைவே பயணிக்கும். பீரங்கியில் நெருப்புக்குண்டு நீண்ட தொலைவு பயணிக்கும். இந்த வேறுபாட்டை சொல்லக்கூடிய சொற்களை வேராக இச்சொற்கள் கொண்டுள்ளன.

துப்பு (To Spit - துப்புதல் அல்லது உமிழ்தல்) + அக்கி (Fire - தீ.) = துப்பக்கி > துப்பாக்கி ஆனது. 
அதாவது தீயை (குண்டு) துப்பும் கருவி என்று பொருள். துப்புதலில் ஒரு பொருள் குறைந்தளவு தொலைவே செல்லும். இதேபோலத் துப்பாக்கியிலும் குண்டு குறைந்த தொலைவே பயணிக்கிறது.


பீர் (பீர்ச்சு - Eject பீரிடுதல்-To Stream out) + அங்கி (Fire; நெருப்பு.) = பீரங்கி ஆனது. 
அதாவது தீ (குண்டு) பீரிட்டு வெளியேறும் கருவி என்று பொருள். பீரிடும் ஒரு பொருள் துப்புதலில் பயணிக்கும் தொலைவை விட அதிக தொலைவு பயணிக்கும். இதேபோலத் பீரங்கியில் குண்டு நெடுந்தொலைவு பயணிக்கிறது.

துப்பாக்கி என்பது சொல்லின் ஒலிப்பும் துப்பாஞ்சி என்ற துருக்கி மொழிச் சொல்லின் ஒலிப்பும் ஒன்றுபோல இருப்பதால் அதனடிப்படையில் துருக்கிமொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொல் தான் துப்பாக்கி என்றே வைத்துக்கொண்டாலும், அதன் தமிழ் வேர்ச்சொற்கள் இயல்பாக துப்பாக்கியை குறிப்பதால், ஏன் அவற்றை பிறமொழிச்சொற்கள் என கூறவேண்டும். தமிழ்ச்சொற்களே என கூறலாம்.

Parliament என்ற ஆங்கிலச்சொல்லுக்கு தமிழில் பாராளுமன்றம் என்று பெயர். இதில் இரண்டுமே ஒலிப்பில் ஒரே சொற்கள் போல இருப்பதால் பாராளுமன்றம் என்ற சொல் ஆங்கிலச்சொல் என்று கூறமுடியாது. 

பார் + ஆளும் + மன்றம் என்பதே பாராளுமன்றம் என்றானது.

அதுபோல துப்பாஞ்சி என்ற சொல்லும் துப்பாக்கி என்ற சொல்லும் ஒலிப்பில் ஒன்றுபோல இருப்பதால் துப்பாக்கி என்ற சொல் துருக்கிச்சொல் எனச் சொல்வதும் தவறு.

இனி துப்பாக்கி, பீரங்கி ஆகியச் சொற்கள் தமிழ் என்றே கூறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...