வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)



  தமிழில் புதியச்சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்குப் பதிவிடுகிறேன்.

மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாகப் புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லைச் சொன்னால் அது எதைக் குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதைப் பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு இணையான புதியச்சொற்களை உருவாக்க அச்சொற்களை அப்படியே மொழிப்பெயர்த்துச் சொல்லாக்கம் செய்கிறோம் அல்லது அச்சொற்களுக்கு என்ன பொருள் எனக் கண்டுபிடித்து, இரண்டு அல்லது மூன்று சொற்களை அப்படியே வரிசையாக இணைத்துச் சொல்லாக்கம் செய்கிறோம்.. பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி உள்ளதோ அப்படியே வரிக்குவரி தமிழில் மொழிபெயர்த்துச் சொற்களை உருவாக்கிவருகிறோம்.


உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தமிழ் எனச் சொல்லிக்கொண்டு, பலமொழிகளிலிருந்தது சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலத்தைப் பின்தொடர்கிறோம். அம்மொழியின் சொற்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லாக்கம் செய்கிறோம், எவ்வளவு ஒரு இழிவான நிலைக்குத் தமிழைக் கொண்டுவந்து விட்டு விட்டோம். இதற்குப் பெயர் தான் சொல்லாக்கமா? நம்முடைய பழந்தமிழ் சொல்லாக்கமுறைகளை ஆராய்ந்து அதன்வழியில் சொல்லாக்கம் செய்யாமல், ஒப்புக்குச் சொற்களை உருவாக்கும் இப்பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாமே, நான் இவ்வாறு சாடுவது கீழ்காணும் சொற்களைப் போல் சொல்லாக்கம் செய்யும் தமிழறிஞர்களைத் தான்.


Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை, Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை, Software - மென்பொருள்/மென்கலம், Refringinarator- குளிர்பதனப் பெட்டி, HardWare - வன்பொருள்/வன்கலம் , Photo - புகைப் படம், Drawing - வரைபடம்

இப்படிப் பலச்சொற்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் இதைத் தமிழ் கொலை என்று கூடச் சொன்னால் மிகையாகாது. நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் அறிஞர்கள் DrumStick என்பதற்கு மேள குச்சி என்றும், LadiesFinger என்பதற்குப் பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்பார்கள். நல்ல காலம் தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இம்முறையின் அடிப்படையே தவறு. இவற்றை நாம் கணக்கிற்கு வேண்டுமானால் இவ்வளவு சொற்கள் உருவாக்கப்பட்டது என அரசுக்கு கணக்குக் காட்டலாம், பேச்சு வழக்கில் பயன்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது.


ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழ் சொல் என மொழிப்பெயர்த்து புதிய சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதுவதும், பட்டி மன்றங்கள் நடத்துவதும், மக்களுக்கு மொழிப்பற்று இல்லை என்று சாடுவதும், உணர்ச்சிவசமாய்ப் பேசுவதும் கேட்பவருக்கு நகைப்புக்குரிய விசயமாகத் தான் தெரியுமே ஒழிய எவ்வித மாற்றங்களும் தராது. இம்முறையில் தான் இன்று சொற்களை மன்னிக்கவும் சொற்தொடர்களை உருவாக்கி தமிழ்மொழி என்பது சொல்லே இல்லாத வற்றிய மொழி போன்ற பிம்பத்தைத் தமிழுலகில் உண்டாக்கி வருகிறோம். இதனால் தமிழின் தொன்மை, புகழ், வளமை போன்றவை மங்கி வருகிறது. இன்று ஆங்கிலம் தமிழுக்கு ஆசான மொழியாகி விட்டது.


புகைவண்டி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு, அதற்குச் சொல்லாக்கம் செய்யும் போது உருவாக்கப்படும் சொல் தனிச்சொல்லாகத்தான் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த அந்தச் சொல்லை கொண்டு அத்துறை சார்ந்த மற்றச்சொற்களை உருவாக்க எதுவாக இருக்கும். அதை விடுத்துப் புகை விடுவதால் புகை வண்டி என்றும், புகையில் படம் எடுப்பதால் புகைப்படம் என்றும் சொல்லாக்கம் செய்வது எவ்வளவு ஒரு அறிவார்ந்த முறையாகும். சொற்களை உருவாக்க குறைந்தபட்சம் அப்பொருட்களைப் பற்றித் தெளிவான சிந்தனை, தெளிவு தேவை. இதில் எதுவுமே இல்லாமல், சொல்லாக்கத்தை ஒரு வேலையாகச் செய்யும் அறிஞர் பெருமக்களால் தான் தமிழ் இன்று தள்ளாடி வருகிறது. இதுபோன்ற சொற்களால் தான் பலரும் புகைவண்டி என்றால் என்ன என்று கேட்டால் என் அப்பன் தான் எனச் சொல்லி நக்கலடிக்கவும், சிரிப்பதற்கு இதுபோன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

சரி Photo என்பதற்குப் புகைப்படம் என்றே வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் Photography என்ற சொல்லை Clipping என்ற சொல்லாக்க விதிப்படி Photo என ஒற்றைச் சொல்லாகவும், Camera என்ற சொல்லை அதே விதிப்படி Cam என்றும் அழைக்கின்றனர். Photograph என்ற சொல்லுக்குத் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து இரண்டு சொற்கள் அப்படியே சேர்த்து (புகை + படம்) என்று எழுதுகிறோம். அப்படியென்றால் Photocam என்ற ஒற்றை ஆங்கிலச் சொல்லுக்கு என்ன எழுதுவோம்? புகைப்பட ஒளிபதிவு கருவி என்று எழுதுகிறோம். இவ்வாறு சொல்லாக்கம் செய்தால் யார் இச்சொல்லை பயன்படுத்துவார்கள்.

இதைச் சொல் என்று கூறுவது சரியா? அல்லது சொற்றொடர் என்று கூறுவது சரியா? ஒரு சொல்லை உருவாக்க போய் இன்று சொற்றொடர்களைத் தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இதைப் பேச்சு வழக்கில் சொல்லி முடிப்பதற்குள் விடிந்துவிடும் அல்லவா!. புதிய பொருட்களுக்கு, புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதியச்சொற்கள் தான் உருவாக்க வேண்டும், அது ஒற்றைச் சொல்லாக இருந்தால் மிகவும் நன்று. இனியும் சொற்றொடர்களைச் சொல் என்று சொல்லாதீர்கள்.




தொடரும்.....

2 கருத்துகள்:

  1. "சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது"
    என்பது சரிதான். நீங்கள் சொல்லாக்கம் செய்த ஏதாவது சில வார்த்தைகளை மாதிரிக்கு தந்திருக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நண்பரே (இது பாகம்-1) வரும் பதிவுகளில் பாருங்கள் :)

      நீக்கு

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...