சொல் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நம்மிடம் நிலவினாலும் அடிப்படையில் சொல் என்பது ஒலிகளைச் சார்ந்தது. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே 'பேச்சு' என்றும் 'சொல்' என்றும் குறிப்பிடுகிறோம். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சொற்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் .
மனித இனத்தில் முதல் தொடர்பு ஊடகம் வாய்வழி ஒலிகள் மட்டுமே. மனிதன் தன் கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள அவனால் ஏற்படுத்தகூடிய ஒவ்வொரு வாய்வழி ஒலிகளுக்கும் ஒவ்வொரு பொருள் கொண்டிருந்தான். காலப்போக்கில் தொலைவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு ஒலிகளுக்கும் ஒவ்வொரு எழுத்தை குறிப்பிட்டுக் கடிதம், மடல், தூது போன்ற போக்குவரத்துகள் நடந்தன. இத்தொடர்புகளில் வாக்கியங்களை இவ்வாறு தான் எழுதவேண்டும், உருவாக்கவேண்டும் என்று ஒரு பொதுவான முறையை (இலக்கணம்) உருவாக்கி பயன்படுத்தினான். அவனுடைய கருத்துக்களை அவனுக்குப் பின்வரும் சந்ததிகள் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு நூல்களை எழுதும் பழக்கம் தோன்றியது. இவ்வாறே ஒவ்வொரு மொழியும் பிறந்துள்ளது. உலகின் பல பாகங்களில் இருந்த ஒவ்வொரு இனமும் தங்களின் தேவைக்கேற்ப தத்தம் மொழிகளை உருவாக்கிக்கொண்டனர்.
ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அதாவது ஒலிகளுக்கும் ஒவ்வொரு இனத்தவரும் வெவ்வேறு வகையான பொருளைக் கொள்ளும்போது ஒவ்வொரு மொழிகளும் பிறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு புதுப் பொருள்களுக்கும்/கண்டுபிடிப்புகளுக்கும் அதன் பண்புகள், பயன்கள், அமைப்புகள் அடிப்படையில் பல ஒலிகளை (எழுத்துக்களை) இணைத்துப் புதிய சொல், அதாவது உரிச்சொற்களை உருவாக்கியுள்ளனர். நம் மொழியில் ஒவ்வொரு எழுத்துக்கும் பல பொருள்கள் உண்டு. அந்த எழுத்துக்களை மூலமாகக் கொண்டு உருவாகியிருக்கும் சொற்களை இனம் கண்டால் இந்தக் கூற்று விளங்கும். இதோ சில எழுத்தின் பொருள்களும் அவற்றை மூலமாகக் கொண்டு உருவான சில சொற்களும்.
ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அதாவது ஒலிகளுக்கும் ஒவ்வொரு இனத்தவரும் வெவ்வேறு வகையான பொருளைக் கொள்ளும்போது ஒவ்வொரு மொழிகளும் பிறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு புதுப் பொருள்களுக்கும்/கண்டுபிடிப்புகளுக்கும் அதன் பண்புகள், பயன்கள், அமைப்புகள் அடிப்படையில் பல ஒலிகளை (எழுத்துக்களை) இணைத்துப் புதிய சொல், அதாவது உரிச்சொற்களை உருவாக்கியுள்ளனர். நம் மொழியில் ஒவ்வொரு எழுத்துக்கும் பல பொருள்கள் உண்டு. அந்த எழுத்துக்களை மூலமாகக் கொண்டு உருவாகியிருக்கும் சொற்களை இனம் கண்டால் இந்தக் கூற்று விளங்கும். இதோ சில எழுத்தின் பொருள்களும் அவற்றை மூலமாகக் கொண்டு உருவான சில சொற்களும்.
கோ - என்றால் அடிப்படையில் உயர்வான/முதமையான/ஆதாரமான எனப் பொருள். இந்த ஒலியைக் கொண்டு பிறந்த சொற்கள் பல, உதாரணத்திற்குக் கோவில், கோல், கோள், கோபுரம், கோட்டம், கோமான், கோட்டை, கோட்பாடு, கோகுலம், கோகிலம், கோசலை,கோடி, கோண் எனச் சொல்லலாம்.
கை - என்றால் தண்டு(Bar) / துண்டு/கரம் / வகை எனப் பல பொருள்களைக் கொண்டது. இதை மூலமாகக் கொண்டு உருவான சொற்கள் பல, உதாரணத்திற்குப் பலகை, உலக்கை, இருக்கை, இறக்கை, ஈகை, உடுக்கை, சக்கை, தக்கை, சவுக்கை, சுளகை(முறம்) , அட்டிகை, கடிகை, காக்கை எனச் சொல்லலாம்.
கு - குழி/பொந்து/ஓட்டை/உள்ளே/திசை எனப் பல பொருள்களைக் கொண்டது. இதைப் பின்னொட்டாக(Sufix) கொண்டு உருவான சொற்கள் பல சங்கு, வங்கு, நுங்கு, இடுக்கு, சந்து , கிழங்கு, குடகு, கிடங்கு, மூக்கு, கொக்கு, தரகு, திருகு, நாகு(புற்று), படகு, குழாய் (குழி + வாய்), மதகு, முடுக்கு, முக்கு, தெற்கு, கிழக்கு,வடக்கு, மேற்கு எனச் சொல்லலாம்.
நா – என்றால் நாக்கு/மணம்/இடம்/குணம் எனச் சில பொருள்களைக் கொண்டது. இதை மூலமாகக் கொண்டு உருவான சொற்கள் நாய், நாகம், நாக்கு, நாகணம், நாயகன், நாச்சியார், நாதி, நாடகம், நாடி, நாடு, நாதம் நாற்றம் எனச் சொல்லலாம்.
மனிதனின் அவயப் பெயர்களை (கண், மூக்கு, தலை, வாய், கை, கால் போன்றவை) மூலமாக வைத்தும் பல சொற்கள் உருவாகியுள்ளன.
கண் – கண்மாய், உற்றுக்கண், நகக்கண், கண்ணாடி, கண்ணி, கண்காணி, அலக்கண், அழுகண், ஆனைக்கண், கருங்கண், களிக்கண், கண்மணி.
மூக்கு – மூக்கில், மூக்கன், மூக்குத்தி, மூச்சு, மூசடை, மூஞ்சி, மூர்க்கம், மூஞ்சூறு.
தலை – தலம், தலவாடம்(தளவாடம்), தலைநகர், தலைநிலம், தலைப்பு, தலைமை, தலைமுறை, தலையல், தலையீடு, தலையெடு, தலைவட்டம், ஒருதலை, சமதலை, தடுதலை, முதலை, விதலை, விடுதலை.
வாய் – நாவாய், கால்வாய், குழாய், கணவாய், காவாய், செவ்வாய், திக்குவாய், வாய்ச்சி, வாய்தல், வாய்பாடு, வாய்மை, வாய்வு(வாயு), வாய்பெட்டி, வாய்ப்பரிசி(வாக்கரிசி).
கால் – கால்மிதி, கால்வாய், கால்வடம், அட்டங்கால், ஆற்றுக்கால், ஓடுகாலி, கரிகால், குடக்கால், தீபக்கால், தூபக்கால், நாற்றங்கால், முலைக்கால், வடிகால், வாசற்கால், அகலக்கால்.
மேலே உள்ளது போல் சொற்களை உருவாக்கிய நம் முன்னோர்களின் சொல்லாக்க நுட்பங்களைத் தெரிந்துக்கொண்டு, அந்நுட்பங்களைத் தற்காலத்திய சொல்லாக்க முறைகளில் பயன்படுத்தவேண்டும் . இந்தச் சொல்லாக்க தொடர் கட்டுரையின் அறிவுறுத்தல் மற்றும் எனக்குத் தெரிந்த சில பரிந்துரைகளைகளின் தொகுப்பை இங்குப் பட்டியலிடுகிறேன். இதில் நான் எடுத்துவைக்கும் கருத்துக்கள் மட்டுமின்றிப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் பல்வேறு தருணங்களில் சொல்லாக்கத்தைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன் .
1) சொல்லின் நீளம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் .(fridge குளிர் பதன பெட்டி) |
2) புதிய வரவுகளுக்குப் புதிய சொல்லை தான் உருவாக்க வேண்டும். அதாவது வேர்சொற்கள் போல எனக் கூறலாம். (எ.கா : Motor – முயத்தர்) |
3) கூடுமானவரை பயன்படுத்தாத பழந்தமிழ் சொற்களை(வேர்சொற்களை) கொண்டு புதிய சொற்களை உருவாக்க வேண்டும். (எ.கா : Battery – சாரடை) |
4) ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொல்லை நீக்கி விட்டு புதிய சொல்லை நுழைக்க முயற்சி செய்யாமல், வழக்கத்தில் இருக்கும் சொல்லையும் புதுச் சொல்லையும் பயன்படுத்தவேண்டும். (எ.கா : Sound – ஒலி, சத்தம், கனை) |
5) உருவாக்கப்படும் சொற்கள் உருப்பனியல் (marphology) முறையில் மறைத்தும் / குறைத்தும் உருவாக்கப்படவேண்டும். |
6) ஒரு பொருளை குறிக்கும் சொல் அப்பொருளை பற்றி முழுமையான தகவல்களை அந்தச் சொல்லிலேயே கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் கூடாது.(எ.கா : Photo – புகைப்படம், Drawing – வரைபடம்) |
7) பிறமொழி சொற்களைக் கூடுமானவரை நேரடியாக மொழிப் பெயர்ப்புச் செய்யாமல் அதன் பொருள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் மொழியாக்கம் செய்யவேண்டும். (எ.கா : Alloy – கலோகம்) |
8) வழக்கற்று இருக்கும் பழந்தமிழ் சொற்களை மீட்டுருவாக்கிப் பயன்படுத்தவேண்டும். (எ.கா : Acid – காடி , Signal –சமிக்கை, Steam Engine - நீராழி) |
9) ஒரு புதுச் சொல்லை விளக்க சொல் போல் நீண்ட வடிவில் சொல்லாக்கம் செய்யக்கூடாது. (எ.கா : Gym - உடற்பயிற்சி கூடம், AC-Bus குளிர் பதன பேருந்து) |
10) ஒன்றுபோல் தோன்றும் பல பொருள் கொண்ட சொற்களுக்கு ஒரே பெயர் வைத்துக் குழப்பாமல், ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு சொற்களை உருவாக்க வேண்டும். ( எ.கா : Construction, Structure, Building, Fabrication – கட்டுமானம்) |
11) குறிப்பிட்ட ஒரு 3000 ஆயிரம் தமிழ் சொற்களை வைத்தே புதிய சொற்களை உருவாக்காமல் பொருத்தமான வேர்ச்சொல்லுடன் விகுதிகளை இணைத்து புதிய சொற்களை உருவாக்கலாம் (எ.கா : Computer – கணனி, Network – பிணையம்) |
12) சொல்லாக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயபடவேண்டும். |
13) உருவாக்கும் சொல் மற்ற சொல்களுடன் எளிதாகப் பயன்படுத்தும்படி அமைக்க வேண்டும் (எ.கா: Connection – கணுக்கம், Wire Connection – வட கணுக்கம்) |
தமிழுக்கு வேண்டிய, தேவையான வளங்களைச் சேர்க்க எந்த ஓர் எதிர்பார்ப்பும் இன்றி உழைக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும் போது அவர்களை தட்டிக் கொடுத்து அவர்களது உழைப்பை பயன்படுத்தும் பொருட்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமேயானால் தமிழும் வளரும் தமிழனும் வளருவான், என்னைப்போல் ஒருவன் இது போன்ற ஒரு கட்டுரை எழுத தேவையில்லாமல் போய்விடும்.
-நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக