ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-4)


கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அதை கலையிலக்கியங்களுக்கு பயன்படுத்த முடியாமலாகும். - எழுத்தாளர் ஜெயமோகன்

நம்மில் பலர் கார், பஸ், லாரி, போலீஸ், சினிமா, போட்டோ, பைக், மோட்டார், வக்கில், டாக்டர் இதுபோன்ற ஆங்கிலச்  சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்தினால் என்ன தவறு என்றும், ஆங்கிலமும் இதுபோல் பல மொழிகளிடமிருந்து சொற்களை உள்வாங்கி வளர்ந்த மொழி தானே என்றும் கேட்பதுண்டு. இப்படியொரு கருத்தை நாம் கேட்க உண்மையில் வெட்கப்பட வேண்டும். ஆங்கிலம் ஒன்றும் தமிழுக்கு ஆசான் அல்லவே. 

ஆனாலும் தற்போது நிலைமை அவர்கள் கேட்டது போலத்தான் உள்ளது. மிஞ்சிப் போனால் ஒரு 5 ஆயிரம் தமிழ்ச்சொற்களை மட்டுமே நாம் வழக்கில் பயன்படுத்துகிறோம், மற்ற சொற்கள் அனைத்துமே ஆங்கிலச் சொற்கள் மயமாக உள்ளது. இதனால் தமிழ் வளர்ந்து விட்டதா என்ன? அழிந்து தான் வருகிறது. சுத்தமான பாலில் ஒரு துளி நீர்ப்பட்டால் ஒன்றுமில்லை, ஆனால் ஓராயிரம் நீர்த்துளி பட்டால் என்னவாகும்? பாலின் சுவை மாறிவிடும். அதுபோல் தான் ஒவ்வொரு மொழியும், பால் எனும் ஒரு மொழியில் நீர் எனும் வேற்று மொழி சொற்கள் கலக்கும் போது அந்த மொழியின் சுவை குறைந்து கடைசியில் ஒரு காலகட்டத்தில் அம்மொழி கெட்டுவிடும் அல்லது அழிந்துவிடும்.
 

தமிழ்ச்சொல்லாக்கங்கள் தற்காலத்தில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு தான் நடைபெறுகிறது, இது தவறான முறை. நாம் ஆங்கிலத்தின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு போவதை என்று தான் நிறுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை. Hard Drive என்று ஆங்கிலத்தில் அழைத்தால் அதே போலத்தான் தமிழிலும்(வன்தட்டு) சொல்லாக்கம் செய்யவேண்டுமா என்ன?. இந்தச் சொல்லிலும் பல குழப்பங்கள் ஒருவர் வன் தட்டு என்கிறார், இன்னொருவர் வன்தகடு என்கிறார், மற்றொருவர் நிலைதட்டு என்கிறார். தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது, அதற்காக இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு சொற்களை உருவாக்கி தமிழில் HardDrive என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வருபவர்களைத் தலைதெறிக்க ஓட செய்வது. Engine என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொறி என்றும், Engineer என்றால் பொறியாளர் என்றும் அப்படியே ஆங்கில அச்சுப் பிசகாமல் சொல்லாக்கம் செய்யவேண்டுமா என்ன?. பொறியாளர் என்ற சொல்லை பேச்சு வழக்கில் யாரேனும் பயன்படுத்திக் கேட்டதுண்டா. காரணம் அந்தப் பொறி என்ற சொல் தான். பொறியாளர் என்றால் ‘அரிசி பொரி விற்பவரா’ என்று அதைப் பற்றித் தெரியாதவர் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்ற சிறு பய உணர்வாலேயே பொறி, பொறியாளர், பொறியியல் போன்ற தமிழ் சொற்களைப் பயன்படுத்தாமல் Engine, Engineer, Engineering போன்ற ஆங்கிலச் சொற்கள் மக்கள் மனதில் வேறூன்றி விட்டன. இதுபோன்ற ஆங்கிலத்தின் பின்முனையைப் பற்றிச் செல்லும் போக்கினால் தான் தமிழன் மனதளவில் ஆங்கிலத்தை உயர்வாகவும் தமிழ் சிறுமையாகவும் நினைக்கிறான். தமிழை விட ஆங்கிலத்தை உயர்வாக எண்ணுகிறான்.

இன்னொரு மரபும் சொல்லாக்கத்தில் பின்பற்றப்படுகிறது. அதாவது மின்துறை சம்மந்தப்பட்ட சொற்களுக்கு முன்னால் பட்டம் போட்டுச் சொல்லாக்கம் செய்வது. மின்கடத்தி, மின்தடை, மின்மாற்றி, மின்னோடி, மின்முலாம், மின்சுற்று, மின்விசிறி, மின்பகுப்பு இப்படி மின்சாரத்தைச் சார்ந்த சொற்களுக்கு மின் முன்னொட்டை அவசியம் சேர்க்க வேண்டுமா என்ன?. கேட்டால் ஆங்கிலத்தில் அப்படித் தானே அழைக்கிறார்கள், அதனால் நாமும் அப்படியே சொல்லாக்கம் செய்துவிட்டுப் போகவேண்டியது தானே!, இதில் என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கு என்று கேட்கின்றனர். இப்படி நியாயம் பேசுபவர்களிடம் "ஆங்கிலத்தில் Electric Motor என்று சொல் இருந்தாலும் ஆங்கிலேயன் Motor என்று தான் பேச்சு வழக்கில் அழைக்கிறான். அதே போல் தமிழில் ஓடி, தடை, மாற்றி, கடத்தி, விசிறி, முலாம் என்று அழைப்பது தானே சரி. ஏன் மின் என்ற முன்னொட்டை போட்டு அழைக்கவேண்டும்?" என்று கேட்டால் பதில் இல்லை.

நம்முடைய பழங்காலத்திய சொற்களைப் பகுப்பாய்வு செய்து பார்த்தால் எந்த ஒரு சொல்லும் அது குறிக்கும் பொருளின் முழுப் பொருளையும் உள்ளே பொதித்து வைத்திருப்பது போல் உருவாக்கப்படவில்லை. மாறாக அந்தப் பொருளை சுட்டும் (Hints) இரண்டு அல்லது மூன்று வேர்ச்சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகக் கற்பு என்ற சொல்லில் இருக்கும் கல் எனும் பெயர்ச்சொல்லும் பண்பு எனும் பண்புச்சொல்லும் கல் போன்ற பண்பு என்று குறிப்பதைக் காணலாம். 

 

இன்று நாம் உதாரணத்திற்கு Hockey எனும் ஆங்கிலச் சொல்லுக்கு வளை கோல் பந்தாட்டம் என்று அழைக்கிறோம். காரணம் Hockey என்றால் என்னவென்று தெரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லாக்கம் செய்கிறோம். நாம் சொல்லாக்கம் செய்கிறோமா அல்லது மக்களுக்குப் பாடம் நடத்துகிறோமா?. இப்படித் தான் கால் பந்தாட்டம், கை பந்தாட்டம், மட்டை பந்தாட்டம், மட்டை இறகு பந்தாட்டம், பனிசறுக்குப் பந்தாட்டம் என்று தமிழை பந்தாடுகிறோம். 

 

கிட்டி என்ற விளையாட்டு அனைவருக்கும் தெரியும், இந்தக் கிட்டி என்ற சொல்லில் நமக்கு என்ன புரிகிறது?. கபடி, சிலம்பம் , தாயம், பல்லாங்குழி, சடுகுடு போன்ற சொற்களை நாம் எவ்வாறு புரிந்து கொண்டோம், இந்தச் சொற்களில் என்ன விளங்குகிறது?.

 

இன்னொரு பக்கம் பார்த்தால் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தாமல் வேற்றுமொழிச் சொற்களைத் தான் பயன்படுத்துவேன் என்று அடம் பிடிப்பவர்களை என்னவென்று சொல்லுவது. உதாரணமாகத் துளிப்பா என்று தமிழில் அழகான சொல் இருந்தாலும் ஹைக்கூ என்றும் சென்ரியு என்றும் வேற்றுமொழி சொல்லில் கவிதைத் தலைப்பை வைத்து பாடுவதைத் தானே நம் தமிழ் கவிஞர் பலர் தமிழுக்குத் தாங்கள் ஆற்றும் தொண்டாகக் கருதுகின்றனர். இவர்கள் மட்டும் இல்லை, இதுபோல் பலவற்றைச் சொல்லலாம்.

 

அரசும் தன் அலுவல் செயல்பாடுகளில் தமிழையும் தமிழ் சொற்களையும் எந்தளவிற்குப் பயன்படுத்துகிறது? என்று பார்த்தால் பெருமைப்படும் படி ஒன்றும் இல்லையே. அங்கும் ஆங்கிலத்தின் ஆட்சி தான் கொடி கட்டிப் பறக்கிறது. தமிழன் சொற்கள் இருந்தாலும் தமிழைப் பயன்படுத்தமாட்டான், சொற்களை இல்லை என்றாலும் தமிழைப் பயன்படுத்தமாட்டான். இதில் சாதாரண மக்களை மட்டும் குறைசொல்ல முடியாது, கலை, இலக்கியம், அரசு, தாளியல், ஊடகம், கல்வி போன்ற துறையைச் சார்ந்தோருக்கும் போட்டி போட்டுக்கொண்டு தமிழைப் பாழ்படுத்தி வருகின்றனர். இருக்கும் சொற்களைப் பயன்படுத்தமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிறமொழிகளைப் பற்றிச் செல்லும் இவர்களைத் தமிழின் எதிரிகள் என்று தான் சொல்லமுடியும்.

முனைவர் இராம.கி ஐயா சிறந்த வேர்ச்சொல்லாய்வாளரும், எழுத்தாளரும், மொழியாய்வாளரும் , கலைசொல்லாக்கம் தமிழின் வேர்ச்சொல்லின் வழியே அமைய வேண்டுமென அதன் அவசியத்தையும் வலியுறுத்தி வரும் தமிழறிஞர். அவர் வலியுறுத்தும் அதே வழியில் தமிழில் ஏறத்தாழ சுமார் 2000 கலைச்சொற்களை உருவாக்கி கொடுத்துள்ளார். மேலும் பல சொற்களை அவப்போது உருவாக்கி வருகிறார். அவருடைய வலைப்பக்கம் http://valavu.blogspot.com/. இந்த வலைபக்கத்தில் ஐயா உருவாக்கும் சொற்களின் சொல்லாக்க முறை, சான்று மற்றும் விளக்கங்களை அழகாக எடுத்து வைக்கிறார். மேலும் http://thamizhchol.blogspot.in/ என்ற வலைத்தளத்தில் ஐயா உருவாக்கிய சொற்களின் தொகுப்பும் உள்ளது. இதோ சில சொற்கள்.

Tensile = திணிசு, Power = புயவு , Vector = வேயர், Version = வேற்றம், Volume = வெள்ளம், Tank = தாங்கல், Tension = தந்தம், Terminology = தீர்மவியல் , Thread = திரியீடு , Trade = தருதை , Tube = தூம்பு, Turbine = துருவணை , Turn = திருணை, Solve = சுளுவி , Symbol = பொளி, Connection = கணுக்கம், Sector = செகுத்தி, Spiral = புரி, Reference = எடுக்கை, Quadrant = காலகம் நன்றி - http://valavu.blogspot.com/
மேலே உள்ள சில சொற்களைப் பாருங்கள். வேண்டுமென்றே நான் ஒன்றும் ஆகோ..ஓகோ என்று ஆர்ப்பரிக்கவில்லை, உண்மையில் ஆங்கிலச் சொற்களுக்கே சவால் விடும் அளவிற்குச் சொற்களை உருவாக்கியுள்ளார். அந்தச் சொற்களைப் படிக்கும்போதும், அதைப் பயன்படுத்தும்போதும் பெருமையாக உள்ளது. இத்தொடர் பதிவில் நான் எடுத்துவைக்கும் சொல்லாக்க முறைகள் மற்றும் கருத்துக்கள் யாவும் ஐயாவின் சொல்லாக்க பாணியை ஒத்தது. இருந்தும் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம் இவ்வளவு அழகான சொற்களை உருவாக்கி கொடுத்தும் ஏன் இந்தச் சொற்கள் பேச்சு வழக்கில் வரவில்லை? அல்லது குறைந்தபட்சம் எழுத்து வழக்கில் கூடக் காணமுடியவில்லையே என்ற ஆதங்கம் தான். அதற்கு ஒன்றே ஒன்று தான் காரணம் என நினைக்கிறேன், உருவாக்கப்படும் புதிய சொற்களைப் பலரும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களின் காதுகளுக்கும்/கண்களுக்கும் இச்சொற்களைக் கொண்டு செல்லாதது தான்.

சொல்லாக்கம் பற்றியும் அதை வழக்கில் கொண்டுவருவதைப் பற்றியும் திரு.முனைவர் சு.சௌந்தரபாண்டியன் (தொல்காப்பிய ஆய்வாளார்) அவர்கள் கூறுகையில், இதுபோன்ற புதுசொல் வரவுகளைப் பேச்சு வழக்கில் மற்றும் எழுத்து வழக்கில் கொண்டு வரும் திறன் அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், மேலும் Train என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் புகைவண்டி என்ற கூட்டு சொல்லாக அழைப்பதை விடச் சாரனம் (சாரை+வாகனம்) என்ற தனி/ புதிய சொல்லாக அழைப்பது நல்லது தான் என்றும், நான் இங்கு வலியுறுத்தும் கருத்தைப் பற்றி ஐயா வேறு ஒரு தளத்தில் கொடுத்த பின்னூட்டம் இதோ.

எடுத்த எடுப்பிலேயே கூட்டுச் சொல்லாக இல்லாமல், சுருங்கிய ஒரு சொல்லாகப் புதுச் சொற்கள் தோன்றினால் நல்லதுதான் !
இதுபோன்ற சொற்கள் எப்போது வழக்கத்திற்க்கு வரும் என்றால் அரசு அல்லது அதிகார வட்டம் ஈடுபட்டால் நிகழும் ! உதாரணமாக அரசாங்கம் தொடக்கத்தில் தன் அறிவிப்புகளில் ‘சாரனம் வரும் நேரம்’,சாரனம் பதிவு’ என்றெல்லாம் இச்சொல்லைப்பயன்படுத்தியிருந்தால் மக்கள் அவசரம் அவசரமாக அதைத் தெரிந்துகொள்வர் ! ஆகவே , புதுச் சொற்கள் தோன்றும். – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஐயா சொல்வதைப் போல் ஒரு செயலை வழக்கத்திற்குக் கொண்டுவரும் திறன் அதிகாரமற்ற தனிமனிதனுக்கோ , குழுக்களுக்கோ கிடையாது என்று நாம் இதுவரை பெற்ற அனுபவமே சொல்கிறது. நினைவிருக்கிறதா அரசாங்கம் தமிழகத்தில் இருக்கும் கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் பெயர்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது. அதன் விளைவாகக் கடைகளின் பெயர் பலகைகளில் எவ்வளவு தமிழ் பெயர்கள் இடம்பெற்றன. அப்போது தான் பேக்கரி என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் அடுமனை என்று பெயர் எனத் தமிழன் தெரிந்து கொண்டான். அரசின் இந்த நடவடிக்கை மூலம் தமிழ் தமிழகத்தில் அழகுப்பெற்றதுடன் தமிழன் நிறையப் புதிய சொற்களைத் தெரிந்துக்கொண்டான். இதுபோன்று அரசு நினைத்தால் கல்வி, இணையம், வணிகம், ஊடகம், கலை, விளையாட்டு, போக்குவரத்து, அலுவல் போன்ற போன்ற துறைகளில் புதிய சொற்களை வழக்கத்தில் கொண்டுவரமுடியும்.

ஒரு சொல்லை உருவாக்கும் போது அந்தச் சொல்லை பற்றிய பயன் , பொருள், தன்மை, நிலை பற்றித் தெரிந்து கொண்டு உருவாக்கினால் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக அத்துறை சார்ந்த வல்லுனர்களோ , மேம்புனர்களோ அந்தச் சொல்லை தாங்களே உருவாக்கும் போது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். உதாரணத்திற்குப் பாட்டரி என்பது ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஆங்கிலத்தில் Battery என்று புதிய/பொது சொல்லாக அழைக்கின்றனர். தமிழிலும் அதற்குப் புதிய சொல் வைப்பதற்குப் பதில் மின் + கலம் = மின்கலம் என்று இரண்டு சொற்களைச் சேர்த்து பெயர்ச்சொல்லாக (விளக்க சொல் போன்று) அழைக்கிறோம். அதாவது கலத்தில் ஒரு வகை மின் கலம் என்பதைப்போல் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சொல் பேச்சு வழக்கில் இல்லை. மின்கலம் என்பது Battary என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் சொல் என்று கூறுவதை விட அந்தப் பொருளுக்கான விளக்கச் சொல் (Definition) என்றால் சரியாக இருக்கும். Battery என்பது ஆற்றலை தேக்கி வைக்கும் பொருள் என்பதே சரியான விளக்கமாகும், அதாவது மின்சார ஆற்றலையும் தேக்கி வைக்கலாம் (Electric Battery), எந்திரவியல் ஆற்றலையும் தேக்கி வைக்கலாம் (Mechanical Battery). Battery என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு, அஃதாவது ஒருங்கிணைந்து செயல்படும் பீரங்கி குழுமம். இந்தப் பொருளையும் நாம் உருவாக்கும் தமிழ் சொல் குறித்தால் நல்லது. எனவே ஆற்றல் தேக்கி அல்லது ஆற்றல் கலன் என்பது தான் சரியான விளக்கச்சொலாகும். இதை உருபனியல்(Morphology) முறையில் சொற்களை மறைத்து/குறைத்துப் பின்வருமாறு பயன்படுத்தலாமே.

சாரம்(ஆற்றல்) + அடை(தேக்கம்) அல்லது படை = சாரடை அல்லது சாரம் + கலம் = சாரலம் (அ) சாலம்

மேலே சொல்லாக்கம் செய்யப்பட்ட சாரடை அல்லது சாரலம் சொற்கள் பேச்சு வழக்கில் வரும்போது சரடை என்றும் சரலம் என்றும் ஒலித்திரிபு அடைந்து பயன்படுத்தப்படும். இது ஒரு உதாரணமே, இதுவே இறுதி என்று எண்ண வேண்டாம்.

தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...