புதன், 13 நவம்பர், 2013

தமிழனின் எல்லைகள் பெரியது மனமோ சிறியதுநிலைபெற் றோங்குந் தமிழகத்
தாறறி வுடைமைப் பேறுறுமக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் லொவிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்
- நூல் கர்ணாமிர்த சாகரங்
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவன் கால்பதிக்காத நாடுகள் இல்லை, கால்பதிக்காத துறைகள் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தமிழ்நாடு என்ற என்ற வட்டத்தை தாண்டி உலகின் மற்ற பாகங்களில் வாழும்  நம் இனத்தவர் பற்றிய வரலாறுகள், அன்றாட நிகழ்வுகள், செய்திகள் என எதாவது தெரியுமா? என்றால் நிச்சயம் தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்டு சொன்னால் இவற்றை நம்மிடம் கொண்டுவர வேண்டிய ஊடகத்துறை தன் கடமை மறந்து செயல்படுவதை தான் சொல்லமுடியும். எப்படி இவர்களை குற்றம் சொல்வது சரியா? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நாமே தெரிந்து கொள்ளாமல் மற்றவர்களை குறை சொல்வது சரியா என்று என்று நினைக்க தான் தோன்றும். 

தன்னைப்பற்றியும்,தன் மொழியை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமில்லா அந்நிய மொழி மோகம் கொண்ட தற்கால தமிழனிடம் இவற்றை கொண்டுச்செல்ல இருக்கும் ஒரே வழிகண் ஊடகங்கள் மட்டுமே. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் இரண்டும் இன்று ஒரு சமூகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவை. தற்காலத்தில் ஒரு சமுகத்தை அழிக்கவும், ஆக்கவும் ஆற்றல் கொண்ட ஊடகத்  துறையினர் தாங்கள் சார்ந்திருக்கும் மொழி, இனம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டுபோகவேண்டிய பொறுப்பு நிச்சயம் உண்டு. ஆனால் அந்த பொறுப்பை உணர்ந்து  செயல்படாமல் பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அதற்கு குறுக்கே நிற்கும் எதையும் (மொழி,இனம், பண்பாடு, கலாச்சாரம்) அழித்து அல்லது கெடுத்து தங்களின் வருமானத்தை பெருக்கிகொள்வதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

அஞ்சலி என்ற நடிகைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஜப்பானில் தமிழை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஜப்பானிய தமிழ் அறிஞர் நொபோரு கராஷிமாவுக்கு கொடுக்கபடுகிறதா? இல்லை சீனாவில் முதன்முதலில் தமிழில் நூல் எழுதிய சா ஒ ஜியாங் பற்றி ஏதாவது சொல்லியதுண்டா?. இவர்கள் எப்போதும் செய்திகள் என்று பார்த்தால் தமிழனை பற்றிய தமிழ்நாடு செய்திகள் , சில இலங்கை தமிழர் பற்றிய செய்திகள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொள்கிறன, ஏன் தமிழன் தமிழ் நாட்டில் மட்டும் தான் உள்ளானா?. தமிழ்நாடு என்ற பரப்புக்கு அப்பால் இருக்கும் தமிழ் உறவுகளில் நடக்கும் செய்திகளை, நிகழ்வுகளை என்றாவது சொன்னதுண்டா?. வெளிநாட்டில் நடக்கும் தமிழை வளர்க்கும் ஆராய்சிகள், வெளிநாட்டு ஆசிரியர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், வெளிநாட்டினர் தமிழை பயன்படுத்தும் செய்திகள் என எதாவது இங்கிருக்கும் தமிழர்களுக்கு உருப்படியாக கொண்டு சேர்த்ததுண்டா?. குறைந்தபட்சம் தமிழ் திருநாட்களில் ஒருமுறையாவது இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதை சமுதாயம் நமக்கு கொடுத்திருக்கும் கடமையாக நினைத்து செய்ததுண்டா?

இவர்களுக்கு நடிகை நடிகர் என்ன செய்கிறார்கள், யார் யாருடன் ஓடிபோகிறார்கள், எந்த நடிகை என்ன சோப்பு பயன்படுத்துறாங்க, எந்த சிறுவன் யாரை கெடுத்தான் என்று எழுதுவதற்கே இடம் பத்தவில்லை, இதுபோன்ற செய்திகளை பாவம் எங்கு போய் எழுதுவார்கள். அப்படியே கேட்டாலும் இவர்கள் சொல்லும் காரணம்  "மக்கள் இதுபோன்ற செய்திகளை படிப்பதில்லை, மீறி கொடுத்தால் எங்கள் விற்பனை பாதிக்கப்படும் என்று". இருக்கும் பத்து கடையிலும் ஒரே மாதிரி சாப்பாடு போட்டா நம்மவர் எதாவது ஒரு கடையில் வாங்கி சாப்பிட்டு தானே ஆகணும். அப்படி தான் பத்திரிக்கை துறையினர் ஒருகிணைத்து செயல்பட்டால் இதுவெல்லாம் ஒரு காரணம் என சொல்லமுடியாது. நான் முன்பே சொன்னதுபோல் ஒரு சமுகத்தை ஆட்டிபடைக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு, சமுதாய அக்கறையும் கடமையும் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த சுயநலம், தாழ்வுமனப்பன்மை, கவர்ச்சிபோதை இதே பண்புகள் தான் இன்று செயலற்று கிடக்கும் தமிழனின் பெரிய பிரச்னைகள்.

நம் தமிழ்நாடில் உள்ள எந்தனை பேருக்கு தெரியும் தமிழன் உலகம் முழுதும் சுமார் 125 நாடுகளில் வாழ்ந்துவருகிறான் என்று. இது எப்படி சாதாரண மக்களுக்கு தெரியவரும்? ஊடகங்கள் மூலம் மட்டுமே தெரிய வரும். இது போன்று தெரியவரும் போது தான் நம் சிறுபான்மை கொண்டவர்கள் இல்லை நாம் ஒரு பெரும்பான்மை கொண்ட இனம் என்ற தன்னம்பிக்கை மற்றும் மிடுக்கு வரும். நாம் வேறு எந்த இனத்தவருக்கோ சளைத்தவர்கள் இல்லை என்ற உணர்வு, கர்வம் வரும். இந்த உணர்வு நாளையடைவில் நம் இரத்தில் ஊறி நம்முடைய வருங்கால சமுகத்தில் மற்றும் சந்தியினர் வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களையும் மொழி நமது உயிர் என்ற எண்ணம் வளர ஏதுவாகும். இதற்கு ஒரு சான்றாக தமிழ்நாட்டில் ஹிந்தி பேசி தமிழ்நாட்டுகாரரிடம் வேலைசெய்யும் வடமாநிலத்தவரையும் அவர்களிடம் தாங்கள் வேலைபார்ப்பது போல் எண்ணம் கொண்டு ஹிந்தி பேசி புன்னகை கொள்ளும் தமிழ் முதலாளிகளை சொல்லலாம்.   

பக்கத்தில் இருக்கும் மலையாளியை பாருங்கள் அவர்கள் உலகத்தில் அனைத்து பகுதிலும் வாழ்ந்துவருகின்றனர், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அவர்கள் சற்று பெருன்பான்மை கொண்டவர்கள். வளைகுடா நாடுகளில் ஒருவேளை நம் நாட்டில் உள்ளது போல் வெளிநாட்டு நபர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி கூட செய்யலாம் என்ற நிலை வந்தால் அங்கு ஆட்சியில் யார் அமரவேண்டும் என்பதை மலையாளிகள் தான் முடிவு செய்வார்கள். அந்தளவிற்கு அவர்கள் தொகையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டனர். அங்கு பரவியுள்ள அவர்களை பற்றிய செய்திகளை, அங்குள்ள நிகழ்வுகளை இங்கு இந்தியாவில் உள்ள கைரளி, ஆசியாநெட் போன்ற பல ஊடகங்கள் தனி செய்திதொகுப்பாக தினமும் ஒளிபரப்புகின்றனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தியாவை தலைமை இடமாக கொண்ட இந்த ஊடகங்களுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் விளம்பரம் வேறு செய்கின்றன.

மலையாளிகளின் தொகையை விட அதிக தொகை கொண்ட நாம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா,கனடா, ஜெர்மனி, பிரிட்டன் என பலநாடுகளில் வாழும் நாம், சிங்கப்பூரில், சிறிலங்காவில் தமிழ் ஆட்சி மொழியாக (திட்டுவது கேட்கிறது) கொண்ட நமக்கு மலையாளிகளுக்கு உள்ள இன உணர்வு ஏன் வரமாட்டேன் என்கிறது. இதனால் தான் அண்டையில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் தமிழனை உன்னைப்பற்றி உனக்கே தெரியாத உன்னிடம் உடமைகளை பிடுங்குவது சுலபம் என அடிக்கிறானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.


சரி பத்திரிக்கை துறை தான் இப்படி என்றால் தொலைக்காட்சி துறை அதற்கு மேல் ஒருபடி முன்னேறி இன்று தமிழையும், தமிழ் சமுகத்தையும் அழிக்கும் வேலைகளை வேகமாக செய்துவருகிறது. பெண்களை மொழியுடன் ஒப்பிட்டு பெண்களின் பெண்மையை பெருமைபடுத்திய நம் இலக்கியங்கள், வரலாறுகள் இன்று வெட்கி தலைகுனியும் வகையில் பெண்கள் தன் கணவனுக்கு மட்டும் கட்ட வேண்டிய அங்க அழகுகளை இன்று ஊரே பார்த்து ரசிக்கும் வண்ணம் அளவிற்கு உடல் அழகை காட்டி நிகழ்ச்சிகள், செய்திகள் வழங்கி வருகின்றனர். 

ஒரு காலத்தில் DD என்று அழைக்கப்பட்ட மத்திய அரசின் தொலைகாட்சியில் செய்தி வசிக்கும் பெண்கள் தங்களின் முந்தானையை கொண்டு உடம்பை மறைத்து செய்திகளை வாசித்த காலம் போய்  இன்று நாகரீகம் என்ற போர்வையில் உடம்பை காட்டி செய்தி வாசிக்கும் நிலையை  கண்டால் வரும் காலங்களில் எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் தான் ஏற்படுகிறது. சிலர் இதுபோன்ற செயல்களை நாம் காம கண்ணுடன் பார்க்க கூடாது என்று சொல்லுவது சமூகத்தை இந்த துறையினர் எப்படி மாற்றிவிட்டனர் என்ற நம் ஆதங்கத்திற்கு சான்றாகத்  தான் அமைகிறது. நாடகத் தொடர்கள் என்ற பெயரில் இல்லத்து பெண்களை இழிவுபடுத்துவதும், கள்ளத்தொடர்பு, மரியாதையின்மை, முரட்டு குணம், பேராசை, பாசமின்மை என ஒரு பெண்மையின் தன்மையை கெடுப்பதை தான் இக்காலத்து தொலைக்காட்சிகள் புதுமையான நிகழ்ச்சி என்ற பெயரில் செய்துவரும் மோசடி காரியங்கள். தமிழ் புத்தாண்டுக்கு தமிழே தெரியாத நடிகையை பேச வைத்து தமிழை கொள்ளுவதை தமிழர்களாகிய நாம் பார்த்து ரசிக்கும் வண்ணம் நம்முடைய சுரணையை மாற்றிவைத்துள்ளனர் இந்த தொல்லை துறையினர்.

இவர்களும் செய்திகள் என்று தமிழ்நாடு, இந்திய, இந்தியா மற்றும் சில உலக செய்திகள் என ஒரு வட்டத்தைபோட்டு, அதே வட்டத்திற்குள் சுற்றும் முளைகுட்சியில் கட்டிய விலங்காகிவிட்டனர். பணத்திற்காக சமுகத்தில் கெட்டபெயர் கொண்டவர்களை கூடா தங்கள் தொலைகாட்சியில் தோன்ற வைத்து நல்லவர்களாக சித்தரித்து காட்டி அதில் நித்திரை கொள்கின்றனர். மொத்தத்தில் தமிழையும் தமிழனையும் கொன்று அந்த குருதி எனும் வெள்ளத்தில் விவசாயம் செய்து விளைச்சல் பார்கின்றனர். 

இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும், நம்முடைய அருமைபெருமைகளை நம் சந்ததியினர் மற்றும் மற்ற மாநிலத்தவரும் உணரும் வண்ணம் நம் செயல்பாடுகள் அமையவேண்டும். குறிப்பாக கல்வியில் தமிழை ஒரு பாடமாக மட்டும் நடத்தும் போக்கை மாற்றி தமிழ் உணர்வை படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெருக்கும் வகையில் பாடத்  திட்டங்கள், சிறப்பு பயிற்சிகள், சிந்தனைகள் அமையவேண்டும். தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை, செய்திகளை, தமிழ் பற்றிய செய்திகளை, அறிஞர்களைஆர்வலர்களை,  நம் சமூகத்து பெரிய நிறுவனர்களை, விஞ்ஞானிகளை பற்றிய செய்திகளை இங்குள்ள ஊடகங்கள் மக்களிடம் அவப்போது கொண்டு செல்லும் பணியை ஒரு சமுதாய  பணியாக கருதி செயல்படுத்த முன்வரவேண்டும்.    

மக்களிடம் பணத்தை வாங்கி அதைக்கொண்டே அவர்களை கெடுப்பது ஒருபக்கம் நடந்தாலும்,  இன்னொரு பக்கம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி இந்த சமூக கடமைகளை இணைய துறை சிறப்பாக செய்துவருகிறது. 


தமிழனின் எல்லைகள் பெரியது.

நம்மவரின் மனமோ சிறியது


என்ற நிலை மாற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...