ஞாயிறு, 12 ஜனவரி, 2014

காங்கிரஸ் கொடியும் அதன் பெயரும்















ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்த செய்தி தான், நாட்டின் தேசிய கொடிக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, இரண்டு கொடிகளின் நடுவில் இருக்கும் அசோகா சக்கரமும், கையும் மட்டும் தான் வித்தியாசப்படும். இரண்டு கொடிகளை இப்படித் தான் வித்தியாசபடுத்திப் பார்க்கவேண்டும் எனும்போது நமக்குத் தெரிந்த விசயம் அயல் நாட்டுக்காரர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம் தான். அவர்களைப் பொறுத்தவரை மேலே காவி நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கிழே பச்சை நிறமும், நடுவில் ஏதேனும் சின்னம் கொண்ட கொடியை நமது நாட்டின் தேசியகொடி என்று தவறாக நினைத்துகொள்கின்றனர்.படிக்காத மற்றும் கிராமப்புற மக்களின் மனதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இந்திய கட்சி என்றும் மற்றக் கட்சிகள் எதோ பக்கத்து நாட்டுப் பகையாளி கட்சிகள் போன்றதொரு தவறாக மனதில் உருவகப்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் கொடியையும் தேசிய கொடியையும் பார்க்கும் மாணவர்கள் மனதில் கட்சி கொடி மீது மறைமுகமாக ஒரு மரியாதையை உண்டுபண்ணுகிறது. 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் இயக்கம்' என்று படிக்கும் மாணவர்கள் 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் கட்சி' எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு மேலும் காங்கிரஸ் என்ற சொல்லின் மீதான மரியாதை மேலும் அதிகமாகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற அரசு விழாக்களில் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கொடிக்கும் மரியாதை செய்யப்படுவது போன்றே எண்ணங்கள் ஓடுகிறது. இந்தக் கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பு விருப்புகள் நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றைத் தவறுதலாகப் பாதிப்படைய செய்கிறது. இப்படிப் பல குழப்பங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்றதொரு குழப்பங்கள் விளைவிக்கக் கூடிய காங்கிரஸ் கொடியை யார் அடவு(Design)செய்தது்?, இதுபோன்று கட்சி கொடியையும், பெயரையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாமா?,இதுபோன்றதொரு கொடியையும் பெயரையும் கட்சிகள் கொண்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?


1946-ம் ஆண்டு, இந்திய தேசியக்கொடி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்தேறியது. அவ்விவாதத்தின்போது, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை தேசிய கொடியாக ஏற்கலாம் என்று நேரு கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கொடி மாதிரியே தேசிய கொடி இருக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன. காங்கிரஸ், இதற்கு உடன்படவில்லை.இக்கொடியை மகாத்மா காந்தியடிகளும் விரும்பவில்லை.மேலும் பிற்காலங்களில் காங்கிரஸ் எனும் சொல் மற்றும் கொடி பற்றிய குழப்பங்களை இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு காங்கிரஸ் கட்சியின் வேலை முடிந்துவிட்டது கட்சியைக் கலைத்துவிடலாம் எனபது காந்தியின் கருத்து. அவர் கருதியது போல் செய்திருந்தால், இன்றைக்குக் காங்கிரஸ் கொடி இல்லாமல் போய், தேசியக்கொடி மட்டுமே இருந்திருக்கும். இதற்கு மரியாதையும் கிடைத்திருக்கும்.ஆனால் காந்தியடிகள் சொன்னதை ஏற்பதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை. சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்கிற முத்திரையுடன் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை ஆட்சி செய்ய ஆசை கொண்டனர். அந்த ஆசை தான் இன்றுவரை இந்தக் கொடியையும், பெயரையும் காங்கிரஸ் கட்சிகள் பயன்படுத்தக் காரணமாக உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததால் தேசிய கொடி பற்றிய அதன் முடிவை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான், நமது தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசமில்லாமல் ஒரே தோற்றத்தில் தெரியும்படி ஆகிவிட்டது.நமது நாட்டின் இராணுவ கொடியிலும், இக்கொடி அலங்காரமாக இடம் பெற்ற கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

திரினாமுல் காங்கிரஸ் கொடி


தேசியவாத காங்கிரஸ் கொடி

தேசிய கொடியை ஒத்த கொடிகளையும், காங்கிரஸ் பெயரையும் இந்திய கட்சிகள் பயன்படுத்த எவ்வித தடைகளும் இல்லை என்று தெரிகிறது.ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் தேசிய கொடியை போன்றே தங்களின் கொடியையும், காங்கிரஸ் என்ற பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்களும் தேசிய கொடியை ஒத்த அடவில் (Design) தங்களின் கொடியை பயன்படுத்த காரணம் காங்கிரஸ் கடைபிடிக்கும் அதே சூட்சமாகத் தான் இருக்கமுடியும்.இவைதவிர YSR காங்கிரஸ் கட்சி, அரியானா ஜன்ஹிட் காங்கிரஸ்(BL), BSR காங்கிரஸ், கேரளா காங்கிரஸ்(M) போன்ற கட்சிகள் காங்கிரஸ் என்ற சொல்லை கட்சி பெயருடன் பயன்படுத்தி வருகின்றனர்.


பிற நாடுகளில், அந்நாட்டு தேசிய கொடி பெரிதும் மதிக்கப்படுகிறது. இங்கே, காங்கிரஸ் கொடியின் நிறங்களுக்கும், நமது தேசிய கொடியின் நிறங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், நமது தேசிய கொடி பிற நாடுகள் அளவிற்குப் போற்றிப் புகழப்படுவதில்லை.அவப்போது கட்சியின் மீது ஏற்படும் ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களின் பார்வையில் நாட்டின் மீதுள்ள பற்று குறைகிறது.படித்தவர்களுக்கே இரு கொடிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காங்கிரஸ் கொடி எனும் நோக்கத்தில் இந்த மூவர்ணம், இஷ்டத்திற்கு அக்கட்சிக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.காங்கிரஸ் கொடிக்கு எதிராக நடத்தப்படும் ஆர்பாட்டங்கள், போராட்டங்களின்போது, காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தும் நோக்கில், தேசிய கொடியும் அவமானப்படுத்தப்படுகிறது.காங்கிரஸ் கொடியை எரிக்கும்போது, தொலைகாட்சி மற்றும் பல ஊடகங்களின் தற்போதைய வளர்ச்சி காரணமாக உடனுக்குடன் அதை வெளிநாட்டில் பார்க்கும் மக்கள், இந்தியர்களின் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.இதுபோன்ற நடந்தேறியது நிகழ்வுகள் நிறையவே உண்டு.

இப்படிக் குழப்பங்கள் கொண்ட கொடியையும், பெயரையும் கட்சிகள் பயன்படுத்த உள்நோக்கம் ஒன்றே ஒன்று தான் அது ஆட்சி. நாட்டின் தேசிய கொடி போன்ற ஒத்த கொடியை பயன்படுத்துவதால் வித்தியாசத்தை அறியாத கிராமத்து மக்களின் வாக்குகளை அப்படியே பெற்றுவிடலாம், வாக்கு செலுத்துபவர்கள் யாருக்கு வாக்கை போடலாம்... இவர்களுக்கா அவர்களுக்கா என்ற அந்தக் கடைசி நேர சில வினாடி மன போராட்டத்தை, மனதில் இருக்கும் நிறத்தின் மீதான மரியாதையை கொண்டு தங்கள் கட்சிக்கு ஆதரவாக ஒட்டு விழும்படி செய்துவிடலாம்.இதுபோல் பல நன்மைகள் உண்டு. இந்தக் குழப்பத்தால், இதைக் குழப்பம் என்று சொல்வதைக் காட்டிலும் நுட்பம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.இந்த நுட்பத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உருவாகியுள்ளனர் அப்போதைய கட்சிகளின் மூத்த தலைவர்கள்.இது ஒரு மனோதத்து நுட்பம், இது கொண்டு மக்களைக் கையாளுவதால் என்னமோ காங்கிரஸ் கட்சி என்னதான் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமலும், பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கினாலும் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.

http://poocharam.net/viewtopic.php?f=16&p=1115#p1115

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...