இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.
நீங்கள் பார்த்த இந்த வசதியை கூகுள் நிறுவனம் சில இந்திய மொழிகளுக்கும், மேலும் பல உலக மொழிகளுக்கும் வழங்குகிறது.
பொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான எழுத்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.
இதனால் என்ன பயன்?
தமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் அல்லது தட்டச்சு செய்ய சிரமமாக உள்ளது என எண்ணுபவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளீடு(Input) செய்து இணையத்தேடல்(Internet Search) செய்யலாம், ஜிமெயிலில்(Gmail) தமிழ் மின்னஞ்சல்கள் இடுவு(Compose) செய்து அனுப்பலாம் , கூகுள் டாக்ஸில் (Google Docs) தமிழ் ஆவணங்களை(Documents) கையால் எழுதி சேமிக்கலாம். செல்பேசியில் இந்த நுட்பத்தை கொண்டு எளிதாக தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து இணைய வேலைகளை செய்வது தான் இதன் முதன்மை சிறப்பாகும்.
இந்த ஈர்த்தறி வசதி கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்பேசியில் நாம் பயன்படுத்தும் கூகிள் இணையத்தேடல் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி (Google Translate Tool), கூகிள் டாக்ஸ்(Google Docs) மற்றும் கூகிள் டிரைவ்(Google Drive) போன்றவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் (Gmail) |
ஜிமெயில் (Gmail) |
கூகிள் மொழிபெயர்ப்பு (Google Translate) |
கூகிள் டாக்ஸ் (Google Docs) |
கூகிள் டாக்ஸ் (Google Docs) |
இதுவரை ஆங்கிலம் மற்றும் சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எட்டா கனியாகத் தான் இருந்தது. இந்த குறையை கூகிள் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும் தமிழில் ஈர்த்தறி (Handwriting Recognition) என்பது முடியாத ஒன்றாகவே தமிழ் கணினி மேம்புனர்களால்(Developer) உருவகப்படுத்தப்பட்டு வந்தது. இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரை அளவில் மட்டுமே இதுநாள்வரை இருந்தது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தமிழை கணிமை (Computing) துறையில் மேம்படுத்தும் ஒரு சிறப்பான வசதியை கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளதை நாம் மனதார பாராட்டவேண்டும்.
இந்த வசதியை கொண்டு இனி சமூக பிணையங்களில் (Social Network) தமிழை தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட தமிழில் எழுதி மற்றவர்களுடன் பறிமாறிகொள்ளலாம். கூகிள் மொழிபெயர்ப்பு கருவியில்(Google Translate Tool) எழுத வேண்டியதை கையால் எழுதினால், அது தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். பிறகு அதை அப்படியே நகல் (Copy) எடுத்து முகநூல், கூகிள்+, டுவிட்டர் போன்ற சமூக பிணைய தளங்களில் ஒட்டி பயன்படுத்தலாம். மேலும் இந்த எழுத்தறி வசதியை மேலும் சிறப்பாக்கும் தொடர்பான பணிகளை கூகிள் நிறுவனம் செய்துவருகிறது. நாம் இந்த வசதியை எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து கூகிள் நிறுவனம் தமிழ் சேவையை வழங்கும் என நம்பலாம். மலையாளம், பிகாரி, ராஜஸ்தானி, ஒரிய, காஷ்மீரி போன்ற பல இந்திய மொழிகளுக்கு இதுவரை இந்த வசதிகளை அளிக்காததற்குக் காரணம், அவர்கள் தங்கள் மொழியை இணையதளத்தில் சரியாக பயன்படுத்தாதது தான்.
இந்த வசதியை கொண்டு தமிழில் எழுதும் கையெழுத்து அச்சுப்பிசகாமல் சரியாக வருகிறது. கோணலாக எழுதினாலும் சரி, சிறியது, பெரியதுவென எழுதினாலும் சரி தமிழ் எழுத்து சரியாக வருகிறது. காகிதத்தில் கட கடவென எழுதுவதைப் போன்று எழுதுவதை நிறுத்தாமல் எழுதினால் கூட எழுத்து வரிகள் அருமையாக வருகின்றது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்வென்றால், எழுதிய சொல்லில் ஒரு எழுத்தை நீக்க(Delete) வேண்டும் என்றால் முடியாது. எழுதிய மொத்த வரிகளும் நீக்கப்பட்டுவிடும், மற்றபடி வேறு எந்தப் பெரிய குறைகளும் இல்லை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா? என்றால் அதுவும் இல்லை.
Handwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் ஈர்த்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்த்தறி = ஈர்த்தல் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். ஈர்த்தல் என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறி என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக