செவ்வாய், 24 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (இறுதி பாகம்)

சென்ற இரண்டு பதிவுகளில் இந்தி மொழியின் வரலாறு அதன் தோற்றம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்தி மொழியில் நூல்கள் பிறந்த வரலாறு, இந்தி பற்றி நடுவண் அரசு பரப்பும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்தியில் நூல்கள்
இப்படிப்பட்ட கலவை மொழி இந்தியில் எவ்வாறு நூல்கள் இயற்றப்பட்டது என்ற வரலாற்றை பார்ப்போம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'இராமனந்தர்' எனும் துறவி இராமனை மக்கள் வழிபடவேண்டும் என வடநாட்டின் பல பகுதிகளில் பரப்புரை செய்து அப்பகுதிகளில் இராமன் புகழை பரவச்செய்தார். கல்வியறிவு இல்லாத அம்மக்களுக்கு இராமன் தன் தந்தை இட்ட கட்டளையால் அரசு துறந்து, கானகம் சென்று அங்கு தன் மனைவியை இழந்து அடைத்த துயரம், அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இந்த மனவேதனையே இராமன் புகழ் அப்பகுதிகளில் வேகமாக பரவ காரணமாக அமைந்தது. மேலும் இராமனந்தர் அப்பகுதி மக்கள் பேசும் மொழி வழியாக இராமன் நாமத்தை பரப்பும் பொருட்டு இராமனை பற்றி எழுதிய நூல் தான் இந்தி மொழியில் இயற்றப்பட்ட முதல் நூல். அந்நூலின் பெயர் 'ஆதிகிரந்தம்' என அழைக்கப்படுகிறது.


இராமனந்தருக்கு பின், அவரின் மாணாக்கர் 'கபீர்தாசர்' என்பவர் காசி நகரில் சுமார் 460 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் நெசவு தொழில் செய்த மொகமதிய குடும்பத்தில் பிறந்தார் என்று ஒரு சாரரும் , ஒரு பார்ப்பன விதவை பெண்ணுக்கு மகனாக பிறந்து அவரால் கைவிடப்பட்டு பின்பு ஒரு மொகமதியரால் எடுத்து வளர்க்கப்பட்டவர் என ஒரு சாரரும் கூறுகின்றனர். இவர் கடவுளை இராமன், ஹரி, அல்லா, கோவிந்தன் என்ற பெயர்களால் பாடினார். ஆனாலும் இவர் கடவுள் பல அவதாரங்களை கொண்டவர் என்பதையும், கடவுளை கல், செம்பு, மர வடிவில் வைத்து வழிபடுவது தவறு என்றும், கடவுளுக்காக படையல், நேர்த்திக்கடன், சமய சடங்குகள் நடத்துவது வீண் வேலை என்றும் தனது நூல்களில் மிக கடுமையாக தாக்கியுள்ளார். கபிதாசர் இந்திமொழியில் இயற்றியுள்ள செய்யுள் நூல்கள் பல உண்டு. இவருக்கு பின் வந்த இவருடைய மாணாக்கர்கள் இயற்றிய நூல்களுக்கும் கபிதாசர் பெயரால் வழங்கப்படுகின்றன. கபிதாசரின் நூல்கள் இந்தி மொழியில் உண்டான பின்னரே சுமார் 430 ஆண்டுகளாக செல்லா காசாக இருந்த இந்திக்கு ஏற்றம் உண்டானது.

கபிதாசருக்கு பின் அவருடைய மாணாக்கரான 'நானக்' என்பவர் 'சீக்கிய மத்த்தைப்' பஞ்சாப் தேசத்தில் உருவாக்கினார். இவருடைய பாடல்கள் பஞ்சாபியும், இந்தியையும் கலந்த ஒரு கலப்பு மொழியில் பாடியிருப்பதால் இந்தி பயிலும் நம்மவர்களுக்கு இவருடைய பாடல்கள் எளிதில் விளங்காது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் தர்பங்கா மாகாணத்தில் 'பிசபி' என்னும் ஊரில் பிறந்த வைணவர் 'வித்யாபதி தாகூர்' என்பவர் கிருஷ்ண மதத்தை உருவாக்கி , அதை வடகிழக்கு இந்திய பகுதிகளில் பரவ செய்தார். இந்தி மொழியின் ஒரு பிரிவான 'மைதிலி' மொழியில் கண்ணனுக்கும், அவன் காதலி இராதைக்கும் நடந்த காதல் நிகழ்வுகளை விவரித்து பல பாடல்களை பாடியுள்ளார். இப்பாடல்களையே பின்னர்ப் 'வங்க' மொழியில் 'சைதன்யா' என மொழிப்பெயர்த்து கிருஷ்ணன் நாமத்தை வங்க தேசமெங்கும் பரவச் செய்தனர். ஏன் என்றால் வங்க தேசத்தில் இந்திமொழி பேசப்படுவதில்லை, இந்திக்கு அடுத்த வரிசையில் இருக்கும் வங்கதேசத்தில் எல்லோரும் வங்காளி மொழிதான் பேசுகின்றனர். நிலைமை இவ்வாறு உள்ளபோது எப்படி இந்தி வடமாநிலங்களில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழி என்றும், இந்தியர்களை இணைக்கும் பாலம் என்று சொல்வதெல்லாம், இந்த செய்திகளை அறியாத நம்மை ஏமாற்றும் செயல் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். வங்கமொழி பேசும் மக்களிடம் நம்மவர்கள் தொடர்புகொள்ள வங்க மொழியையும் படிக்க முடியுமா?

இவ்வாறு கபிதார்சர் முதற்கொண்டு கடந்த 520 ஆண்டுகளாக இந்தியை பரவச் செய்த கவிஞர்கள், புலவர்கள் பற்றி இதற்கு மேல் சொல்ல தேவையில்லை. இவ்வாறு 520 ஆண்டுகள் முன் நூல்கள் ஏதும் இல்லாத, கல்வியறிவற்ற மக்களால் வடநாட்டின் பல பகுதிகளில் மொழிகளை பலவாறு திரித்து பேசப்பட்ட, ஒரு பகுதி மக்கள் பேசும் மொழியை மற்ற பகுதியில் உள்ள மக்கள் எளிதில் அறிந்துகொள்ளாதபடி, இப்போதும் பல மொழிகள் பேசப்படும் போது எவ்வாறு வடநாட்டவரின் பொதுவான மொழி என்று சொல்லமுடியும். இதனால் நாம் இந்தி பயின்றால் வடநாட்டு மக்கள் அனைவரிடமும் தொடர்புகொள்ளமுடியும் என்று செய்வதுதெல்லாம் நம்மை மூளை சலவை செய்யும் செயலாகும்.

தமிழ்மொழியில் கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் போன்ற ஒப்பில்லா பாடல்களின் சுவையறிந்த நாம், கபிதாசர் முதலானோர் பாடிய இந்திபாடல்களை படித்தால் வாய் மணக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். உலகமறை திருக்குறள் போன்ற பாடல்களை ஓரளவு கற்ற சாதாரண தமிழனுக்கு கூட இந்தி பாடல்கள் நிச்சயம் இனிக்காது. மேலும் இந்தி நூல்கள் பெரும்பாலும் நம்மை போன்ற உலகத்தில் பிறந்து இறந்து போன இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் போன்றவர்களை கடவுள்கள் போல உயர்வாக உருவகப்படுத்தி பாடப்பட்டுள்ளன. சிவன் போன்ற பிறப்பு இறப்பு இல்லா கடவுள்களுக்கு இங்கு வேலையில்லை. இதனால் இப்பாடல்களை படிக்கும் அன்பர்கள் நம்மைபோன்று வாழ்கையில் மெய்யறிவையும், பேரின்பத்தையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் தத்துவத்தையும், புனிதத்தையும் அறியாமல் போகிறார்கள். மேற்கூறிய தமிழ் நூல்களிலும் சரி, மற்ற தமிழ் நூல்களும் சரி இவ்வித குறைபாடுகள் இன்றி இன்றும் நம் வாழ்வை செம்மைப்படுத்துகின்றன. இவை தான் ஒரு சிறந்த மொழிக்கான சிறப்புகள்.

இந்தி முதலான வடநாட்டு மொழிகள் தமிழை போன்று பழமையானவை இல்லை. அவற்றை பேசும் மக்களை, பழமை தொட்டு இன்றுவரை உயர்வான நாகரீக மற்றும் பண்பாட்டை கடைபிடிக்கும் தமிழ் உலகுடன் ஒப்பிட முடியாது. கடந்த 400 முதல் 520 ஆண்டுளாக இந்தி மொழிக்காக தொண்டாற்றிய புலவர் மற்றும் கவிஞர் பெருமக்களை பலநெடுங்காலமாக தனித்த பேரறிவுடன் தமிழ் தொண்டாற்றி வரும் தமிழ் புலவர் மற்றும் கவிஞர் பெருமக்களோடும் ஒப்பிடக்கூடாது. சம்ஸ்கிருத பொய்க்கதைகளை நம்பி அவற்றின் வழி சென்று, கொலை, புலால் உணவு, மது, சிறு பல கடவுள்களை வணங்குதல், பலசாதி வேற்றுமை போன்ற ஒழுக்கங்களை உள்ளடக்கிய நூல்களை தழுவிய வடநாட்டவர், அவற்றை விலக்கி ஒரே கடவுள் வணக்கத்தையும், அருளொழுக்கம் போன்றவற்றை அறிவுறுத்தும் அருந்தமிழ் நூல்களை பற்றி அறியாதனாலும், நம் தமிழர்கள் மட்டும் இவர்களின் புது மொழியையும், புது நூல்களையும் பயில்வது எவ்வித முன்னேற்றத்தையும் தந்துவிடாது.

இந்தி பேசும் மக்கள் எண்ணிக்கை
125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் சதவீதம் சுமார் 41.03% என சொல்லப்படுகிறது. இதில் துளியும் உண்மையில்லை. வடநாட்டில் சுமார் 50 வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டு பேசும் மக்களையும் இந்திமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என அரசு சொல்கிறது. இந்த மொழிகள் வட்டாரவழக்கில் பேசப்படும் மொழிகள் இல்லை, இந்த மொழிகளுக்கென தனித்தனி எழுத்து முறைகளை கொண்டு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் யாரும் இந்தி எங்களுடைய தாய்மொழி என்று சொல்வதில்லை, அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர். இந்திய அளவில் 61.12% சதவீதம் பேர் இந்தியை பேசுவதாக இன்னொரு கணக்கு காட்டப்படுகிறது, இதுவும் உண்மையில்லை. அதாவது மேற்ச்சொன்ன 50 மொழிகளை பேசும் மக்கள் சுமார் 38.88% சதவீதம். இவர்கள் மக்கள் தொகையை இந்தி பேசும் மக்கள் தொகையுடன் சேர்த்து கணக்கு காட்டுகிறது நடுவண் அரசு. உண்மையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட சரியான மக்கள் தொகை சதவீதம் 24.51% ஆகும்.

Image

நடுவண் அரசு இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 41 கோடி பேர் என கணக்கு சொல்கிறது. இதன் மூலம் பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற மாயத்தை உருவாக்குகிறது நடுவண் அரசு என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது என்கிறார் இந்திய மொழிகள் கணக்கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.

மாயை களைய வேண்டும்
பல மொழிகளை கற்றுக்கொள்வது நல்லது தான், அதில் எந்த தவறும் இல்லை. ஒரு சமூகம் எங்கள் மொழிதான் பெரியது அதை தான் நீங்களும் பேசவேண்டும் என்று சொல்வதை அப்படியே கண்ணைமூடிக்கொண்டு நம்பி படிக்க கிளம்புவது தான் தவறு. தொலைகாட்சிகளில் பேசப்படுவதால் பெரிய மொழி என்றோ , அரசாங்கம் அம்மொழியில் உரையாடுவதால் பெரிய மொழி என்றோ, திரைப்படங்களில் அழகான நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால் பெரிய மொழி என்று மனதில் உருவகப்படுத்துவது நமக்கு அழகில்லை.

- இலக்கிய வளம் இல்லை.
- அறிவியல் வளம் இல்லை.
- உலகளவில் சிறந்த இந்தி நூல்கள் என்று எதுவும் இல்லை.
- எழுத்தும் சம்ஸ்கிருத மொழியில் இருந்து இரவல் வாங்கியது
- சொற்களை அரபு, பாரசீகம், சமஸ்கிருதம், இரானிய மொழிகளிடம் இருந்து இரவல் பெற்றது.
- வயதோ 800 ஆண்டுகள் மட்டுமே.
- கலைச்சொற்களில் தமிழை விட பின்தங்கிய இடம்.
- இந்திய மொழி இல்லை

இவ்வாறு பல குறைபாடுகளை கொண்ட மொழியை படித்தால் நீங்கள் எண்ணுவது போல் வடமாநில மக்களோடு பேசலாம், பழகலாம், தேசிய நீரோட்டத்தில் மிதக்கலாம் என வைத்துக்கொண்டாலும், அதை தவிர்த்து வேறு என்ன நன்மைகள் இருக்கிறது, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஏற்கனவே ஆங்கிலம் வாழ்க்கைக்கு அவசியம் என்று படித்ததின் விளைவு இன்று தங்க்லீஷ் என்றொரு புது மொழி உருவாகி தமிழை அழித்துக்கொண்டு வருகிறது. இப்போது ஒன்றுக்கும் உதவாத இந்தியை படித்து வாழ்கையில் என்ன சாதிக்கபோகிறோம்.இன்னும் தமிழை கெடுத்து தமிந்தி என்ற புதிய மொழியை உருவாக்க தானே முயல்கிறார்கள் இவர்கள். இப்படியே நீங்கள் விளையாடி தமிழை பாழ்படுத்த தமிழ் ஒன்றும் விளையாட்டு பொருளல்ல. ஆங்கிலம் படித்தால் அகிலத்தை ஆளாலாம் என்று சொன்னவர்கள் இன்று நம் நாட்டில் மற்ற மக்களோடு தொடர்புகொள்ள இந்தி அவசியம் என்று சொல்வது வேடிக்கையான ஒன்று.

அறிஞர் அண்ணா ஒருமுறை இந்திய பாராளுமன்றத்தில் இந்தி தேசிய மொழி என்ற விவாதத்தில் 'இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்று சொல்கிறார்களே, நம் நாட்டில் அதிகம் இருக்கும் பறவை காகம் தானே! காகத்தை தேசிய பறவை என அழைக்காமல் ஏன் மயிலை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும்' என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

இவ்வளவும் சொல்லியும், இல்லை இந்தி அவசியம் என்று நினைத்தால் படியுங்கள், யாரும் தடுக்கவில்லை. சிகரட் அடிக்கும் ஒருவர் இன்னொருவரை சிகரட் அடிக்க ஊக்குவிப்பது போல், நீங்கள் படிப்பதற்காக மற்றவர்களும் படிக்க வேண்டும் என்றோ, இந்தி உங்களுக்கு தெரியும் அதை ஊரில் சொல்லி, மற்றவர்களையும் படிக்க சொல்ல வேண்டும் என்று வறட்டு எண்ணத்தோடு பிள்ளைபிடிக்கும் வேலையில் இறங்கவேண்டாம், அதை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள். இந்தியை ஆகோ, ஓகோ என்று புகழ்ந்து மற்றவர்களையும் கெடுக்கும் வண்ணம் தவறான கருத்துகளை இணையத்தில் உலவ விடாதீர்கள். முக்கியமாக 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' நினைக்கவேண்டாம்.

நம் பிள்ளைகள் இப்போது படிக்கும் படிப்புகளின் சுமை அதிகம், இந்த சுமையை மேலும் அதிக்கபடுத்த வேண்டாம். உங்கள் பிள்ளைகள் தமிழ், அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை சிறப்பாக படித்தால் வாழ்கை முன்னேற்றத்திற்கு நல்லது, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எப்போதோ வடநாட்டில் கிடைக்கும் வேலைக்காக இப்போதே மெனக்கெட்டு இந்தியை உங்கள் பிள்ளைகளையோ, நீங்களோ படிப்பது பணத்தை விரையாமாக்கவேண்டாம். அப்படியே படித்தாலும் படிப்பில் சொல்லித்தரப்படும் இந்திக்கும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் இந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒருவேளை வடநாட்டில் வேலை கிடைப்பதாக வைத்துகொண்டாலும், அங்கு சென்று இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பேசும் அளவிற்கு கற்றுகொள்ளலாம். அங்கு சென்று அந்த பகுதி மொழியை கற்றுகொல்லாமல் திரும்பி வருவது தான் தவறு.

பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி படித்தால் தான் வேலை என்று யாரும் சொல்வதில்லை(ஆங்கிலவழி கல்வி பயின்றால் தான் வேலை என்றும் சொல்வதில்). சிறந்த திறமைகளுக்கு முன் மொழி ஒரு பொருட்டல்ல. வடமாநிலங்களில் இயங்கும் பல நிறுவனங்கள் தங்களது அலுவங்களுக்கு (Office) திறமையானவர்கள் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும், திறமையான நபர்கள் வேண்டுமென பல அயல்நாட்டு நிறுவனங்கள் (குறிப்பாக பொறியியல் மற்றும் SOFTWARE) தமிழ்நாட்டில் தங்கள் கிளைகளை திறப்பதை மறந்துவிடக்கூடாது. வடநாட்டு நிறுவனங்களை பொறுத்தவரை இந்தி மொழி தெரிந்தால் நல்லது என்ற அளவில் மட்டுமே உள்ளது, அதுவே தகுதி என்று சொல்வதில்லை. இந்தி தெரியாத யாருக்கும் வேலை இல்லை என்று சொல்வதில்லை, அதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இன்று தமிழகத்தில் பெரும்பாலும் இந்தி தெரியும் என சொல்லிக்கொள்ளும் தமிழர்கள் தங்கள் அலுவல் நிமிர்த்தமாக வடநாட்டில் பணியில் இருக்கும்போது கற்றுகொண்டவர்கள் தான். ஏற்கனவே நம் பிள்ளைகள் ஆங்கிலம் பேச (இது தான் உண்மை) வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக மழலை பள்ளிகளுக்கு கூட இலட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். மீண்டும் இதுபோல் ஒரு செலவு செய்வது அவசியமா என்று சிந்தியுங்கள். ஆங்கில விடயத்தில் தான் நம்மை ஆங்கில மாயை போட்டு ஆட்டுகிறது, இந்தி விடையத்தில்லாவது விழித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மொழி தாகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் சம்பாதிக்க நினைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிட வேண்டாம்.

(இந்த தொடர் கட்டுரையின் மூலங்கள் மறைமலை அடிகளார் அவர்கள் எழுதிய 'இந்தி நம் தேசிய மொழியா?' என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...