வெள்ளி, 31 ஜனவரி, 2014

தமிழகத்தில் நடக்கும் தமிழ் படுகொலைகள்



Scooter – துள்ளுந்து
Motor bike - உந்துருளி – உந்துவளை
AutoRickshaw –மூவுருளி உந்து 
Van – கூடுந்து சிற்றுந்து 
Pickup Truck – பொதியுந்து
Jeep - கடுவுந்து - வல்லுந்து
SUV(Sports Utility vehicle) பெருங்கடுவுந்து
Lorry / Truck – சுமையுந்து – சரக்குந்து
Ambulance - திரிஊர்தி
Motor vehicle – தானுந்து
Train – தொடருந்து தொடர்வண்டி புகைரதம்.
Fighter Jet – போர் விமானம், போர் வானுருத்தி.

Helicopter – உலங்கு வானூர்தி
Boat – படகு. தோனி
Bus – பேருந்து
Ship – கப்பல், நாவாய்.


மேலே உள்ள சொற்கள் சில வாரங்களுக்கு முன்பு இணையதளம் ஒன்றில் வாகனங்களுக்கான தூய தமிழ் சொற்கள் என பிரசுரிக்கப்பட்டவை. இவற்றில் குறுக்கே அடிக்கப்பட்ட சொற்களை பாருங்கள், தமிழுக்கு நல்லது செய்கின்றோம், தமிழை வளர்கிறோம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு தமிழைப் படுகொலை செய்துள்ளனர். இவர்களைப் போன்றே இணையத்தில் ஆங்காங்கே தனக்குத் தெரிந்த இரண்டு மூன்று சொற்களை இணைத்து, இந்த ஆங்கிலச்சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ச்சொல் இது என நிறைய பேர் 
எழுதி வருகின்றனர். இவர்கள் முதலில் இதுபோன்ற சொல்லாக்கங்களை நிறுத்தினாலே தமிழ் பிழைத்துவிடும். புதிய சொற்களை உருவாக்குங்கள் வரவேற்கிறோம், அதற்கு முன் சொல் என்றால் என்ன? சொற்றொடர் என்றால் என்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு (What is word? & What is a sentence?) செய்யுங்கள். 

 சொல் என்றால் ஒரு பொருளை குறிப்பது் (உதா: கப்பல்) - இதில் கப்பல் என்ற சொல் குறிப்பது ஒரே ஒரு பொருளை தான். 

சொற்றொடர் என்றால் பல பொருளை கொண்டு ஒரு பொருளை குறிப்பது. (இழுவை கப்பல்) - இதில் இழுவை என்பது ஒரு பொருள், கப்பல் என்பது ஒரு பொருள். இந்த இரண்டு சொற்களும் இணைத்துக் கப்பலில் ஒரு வகையைக் குறிக்கிறது.


ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் இழுவை கப்பல் என்று இரண்டு சொல்லை இடைவெளி இல்லாமல் இணைத்து எழுதிவிட்டு, புதிய சொல்லை கண்டுபிடித்து விட்டேன்.... கண்டுபிடித்து விட்டேன் என ஊடங்கங்களில் வெளியிட்டு மக்களைக் குழப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் கப்பல் என்பது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு அதற்கு நீங்கள் புதிதாகப் பெயர் வைத்திருந்தால் உண்மையில் பாராட்டப்படுவீர்கள். ஆனால் நீங்கள் புதிய சொல் எனச் சொல்லிக்கொள்வது ஏற்கனவே கப்பல் ஏன அழைக்கப்படும் பொருளை அதன் வினையைக் கொண்டு வேறுபடுத்திக் காட்ட பயன்படுத்தப்படும் வினைப்பெயரை புதிய சொல் என்று பெருமைக்கொள்ளும் உங்களைக் என்னவென்றுச்  சொல்வது. 

சரி உங்கள் வழிக்கே வருவோம், தமிழில் கப்பல் என்ற சொல் இல்லை என வைத்துக்கொள்ளுங்கள், உங்களைப் போன்றவர்களிடம் இந்தத் தண்ணியில் மிதக்கும் பொருளுக்கு என்ன சொல் கொண்டு அழைக்கலாம் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?, மிஞ்சி மிஞ்சி போனால் மிதப்புந்து என்று தானே பெயர் வைப்பீர்கள். எந்த ஒரு வாகனமென்றாலும் சரி அதற்குப் பின்னால் உந்தை சேர்த்து விடவேண்டும் என்று யாராவது உங்கள் கனவில் வந்து அருள் சொன்னார்களா என்ன?. 

தேர், கப்பல், படகு, பறவை, மனிதன், மிருகம் இவை எல்லாம் உந்தி தானே நகர்கிறது, இவைகளுக்கும்கோவிலுந்து, மிதப்புந்து, சிறு மிதபுந்து, பரப்புந்து, நடப்புந்து என்று பெயர் வைத்திருக்கலாமே!நம் தமிழ் வளர்த்த சான்றோர்கள், ஏன் அவர்கள் உங்களைப் போன்று சிந்திக்கவில்லை? 

மேலே இருக்கும் புதிய சொற்களை மட்டும் (அடிக்கப்பட்டது) பாருங்கள் 
Scooter - இது ஆங்கிலச் சொல் 
துள்ளுந்து - (துள்ளு + உந்து ) இது தமிழ் சொல் எனச் சொல்லிகொள்வது. 

ஆங்கிலேயன் மூக்கை சொரிந்தால் நாமும் மூக்கை சொரியவேண்டும் என எல்லாவற்றிற்கும் ஆங்கிலேயனை பார்த்து பார்த்து செய்யும் தமிழனான நாம், ஏன் இதுபோன்ற பொருளுக்கு அவனைப்போல் ஒரே சொல்லாக வைக்க முடியவில்லை. சரி நான் வேறுவிதமாகக் கேட்கிறேன், ஆங்கிலேயர்கள் ஏன் நம்மைப் போன்று அக்காலத்தில் jamb(துள்ளு) induce(உந்து) = jampinduce என உருவாக்கவில்லை. சற்று சிந்தித்து பாருங்கள். தவறு நம் மேல் தான் உள்ளது.

மேலே இருக்கும் சொற்களைப் பார்த்தால், எதோ தமிழ் என்பது நேற்று பிறந்த மொழிபோன்று விளையாடியுள்ளனர். எனக்குத் தெரியவில்லை, 

- நமக்கு இவ்வளவு தான் திறமையா? 
- இதற்கு மேல் ஒன்னும் முடியாதா? இல்லை...
- அழிந்து கொண்டிருக்கும் மொழியை இனி பேசி என்ன பயன் என்ற அடிமைத்தனமோ? இல்லை ....
- அரசே கண்டுகொள்ளவில்லை, நம்ம என்ன சுண்டக்காய் என்ற தாழ்வு மனப்பான்மையோ? இல்லை....
- தமிழுக்கு வாக்கரிசி போட்டுத் தங்கள் வீட்டில் உலை வைக்கவா?


எதற்காக எப்போது பார்த்தாலும் இப்படியே தமிழைக் கொலை செய்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர் எனத் தெரியவில்லை. இதுபோன்ற பிசாத்துச் சொற்களை ஊடகங்களில் போட்டு தமிழை வளர்க்க பாடுபடுவது உண்மையென்றால்... 

Off Topic
Car = சகடை/சகடம், Cockpit = கொடிஞ்சி, Calculus = கலனம், Media = மிடையம், Text = பனுவல், Video = விழியம், Audio = அடுகு, Extreme = எக்கிய, Connection = கணுக்கம், Strain = துறுங்கு, Motor - முயதர், Power = புயவு, Safety = ஏமம், Zone = பகுந்தம், Warp = பாவு, Widget = இடுக்கை, Version = வேற்றம், Value = விழுமம், Vector = வேயர் , Volume = வெள்ளம் (நன்றி - Valavu.Blogspot.in) 

இதுபோன்ற சொற்களையும் போடலாமே. ஐயா முழுவதும் வேண்டாம் தினமும் ஒரு சொல் என்று போடலாமே! போடுவீர்களா?, அது எப்படித் தம்பி? யார் இவர்? இவரைப் போன்றவர்கள் உருவாக்கிய சொற்களைப் பரப்பினால் அவர் வளர்ந்து விடுவாரே? என்ற நல்லெண்ணம் தானே உங்களைத் தடுக்கிறது. இவர்களுக்குப் போட்டியாக நாமும் சொற்களை உருவாக்கி மக்கள் மத்தியில் தமிழுக்கு நல்லது செய்வதுபோல் காட்டிக்கொள்வோம், தவறாக இருந்தால் எவன் என்ன கேட்டுவிடப் போகிறான் என்ற சுயநலம் தானே உங்களை இதுபோன்று சொல்லாக்கம் செய்யத் தூண்டுகிறது. 

நீங்கள் நினைப்பதுபோலத் தான் தமிழ் உலகமும், தன்னைப் பற்றியும், தன் மொழியைப் பற்றியும் எதுவுமே தெரியாதது போல் கண்ணிருந்தும் குருடராய், ஆங்கிலேயன் மொழியையும் அவன் செய்யும் அனைத்து செய்கைகளையும் அப்படியே பார்த்து பார்த்துச் செய்து குரங்கு குல்லா கதையில் வரும் குரங்கு போன்று தானே தமிழன் இருக்கிறான்.   இதுதான் உண்மை. 

ஆங்கிலத்தைத் தவறாக எழுதிவிட்டால் எதோ செய்யாத குற்றத்தை செய்ததுபோல் பார்க்கும் நம் தமிழ் சமூகம், தமிழில் இதுபோன்ற தவறான சொற்கள் வரும்போது அதற்கு வாழ்த்து சொல்லி வளர்த்து விடுகின்றனர். சரியான சொற்கள் அப்படியே உள்ளன, தவறான சொற்கள் பலவடிவில் பலரால் உருவாக்கப்பட்டு மக்களிடம் கொண்டுச்செல்லப்படுகிறது. கொண்டு செல்லப்படும் சொற்கள் ஒருநாள்கூட உயிர் வாழாமல் மறைந்துபோகிறது. 

ஆங்கிலத்தில் இருக்கும் சுமார் 50,000 அடிப்படை அறிவியல் சொற்களுக்குச் சரியான தமிழ் சொற்கள் இல்லை. இருக்கிறது என்று கணக்குக் காட்டப்படுபவைகளில் சுமார் 80% சொற்களே இல்லை, வெறும் சொற்றொடர் தான்.

ஆங்கிலத்திலும் ஆரம்பத்தில் சொற்றொடர் போல் சொற்கள் உருவாக்கினாலும் ஒருசில ஆண்டுகளில் புதிய தனிச்சொல் உருவாக்கப்பட்டு அச்சொல் நடைமுறைபடுத்தப்படுகிறது. தமிழுக்கு ஆங்கிலத்தைப் போன்றதொரு வசதிகளை நாம் பிரிவினை, இனவாதம், அரசியல், பொறாமை, பேராசை, போன்ற காரணத்தினால் கொடுக்க மறுக்கிறோம். மொழி அழிந்தாலும் பரவாயில்லை, அவன் அழியவேண்டும், அவனை வளரவிடக்கூடாது எனத் தாமும் அழிந்து தமிழையும் அழிக்கிறோம். 

பாவம் தமிழன்னை, தமிழனிடம் சிக்குண்டு சின்னாபின்னமாகிறது.


ராஜு சரவணன்

நன்றி - பூச்சரம் தமிழ் புறவம்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=335&p=1330#p1330

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...