செவ்வாய், 10 ஜூன், 2014

நீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களையும் உசாரா இருக்க சொல்லுங்க!


Image

"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகாரர்களுக்கு இருக்கத்தான் செய்வார்கள்" என்பதை போல மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கென்றே திருடர் கூட்டம் ஒன்று தமிழ் நாட்டின் பல இடங்களில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பேசுவதை கேட்டால் குறிப்பாக இளைஞர்களும், சிறுவர்களும், இல்லாத்தரசிகளும், படிக்காத பாமர மக்களும் ஏமாறுவது உறுதி.

செல்பேசியில் அழைப்பு ஒன்று வருகிறது, எடுத்து பேசினால் ஒரு பெண் பேசுகிறார். "சார்... வாழ்த்துகள், நாங்கள் ராகவேந்திரா நகைக் கடை, அம்பத்தூர் OT யிலிருந்து பேசுகிறோம். எங்கள் கடை திறப்பு விழாவை முன்னிட்டு அதை விளம்பரம்படுத்தும் நோக்கில் நாங்கள் நடத்திய குலுக்கலில் போட்டியில் உங்களுடைய மொபைல் நம்பருக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இது உங்களுடைய நம்பர் தானே?" என்று கேட்பர்.

"ஆம் அது என்னுடைய எண் தான் என்று ஆர்வமாக சொன்னால்" மேற்கொண்டு அவர்கள் "சார் உங்களுக்கு முதல் பரிசாக வைரகல் பதித்த கோல்ட் ரிங் விழுந்துள்ளது, அது சரியாக 6 கிராம் இருக்கும், அதன் வேல்யூ அப்ரக்ஸ்மேட்டா 16000 ரூபாய் இருக்கும். இதை வாங்கிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்பார்கள்.

"சரி வாங்கிகொள்கிறேன்" என்று சொன்னால் அடுத்து "சார் உங்களுடைய அட்ரசை தாங்க, நாங்கள் சரியாக ஒரு வாரத்தில் அந்த அட்ரசுக்கு ஸ்பீட் போஸ்டில் பரிசை அனுப்பி வைக்கிறோம், அதை கொண்டுவரும் போஸ்ட்மேனிடம் தபால் மற்றும் சேவை வரிக்கான அமௌண்ட் ரூபாய் 1200 கொடுத்து பரிசை வாங்கிகொள்ளுங்கள்" என்று சொல்வார்கள்.

"இல்லை என்னால் முகவரி கொடுக்க முடியாது நானே அங்கு வந்து பரிசை வாங்கிக்கொள்கிறேன்" என்று சொன்னால் "சரி சார் நீங்கள் நாங்கள் சொல்லும் முகவரிக்கு வந்து எங்களை செல்பேசியில் அழையுங்கள், நாங்கள் எங்களுடைய பணியாளரை அனுப்பி வைக்கிறோம், அவரிடமே ரூபாய் 1200 ஐ கொடுத்து பரிசை வாங்கிகொள்ளலாம் என்பார்கள். சரி என்று விலாசத்தை கேட்டால், கடை விலாசத்தை சொல்லமாட்டார்கள் ஒரு தெருவின் விலாசத்தை சொல்வார்கள். அங்கு நாம் சென்று அவர்களை அழைக்கவேண்டும்.

இந்த நூதன ஏமாற்று வேலையில் யாருக்கும் சந்தேகம் வராதபடி அவர்கள் கடைபிடிக்கும் நுட்பங்களை பாருங்கள்.

1) நகைக்கடை, பரிசு மோதிரம் என்று சொல்வதால் பரிசு பொருளை வைத்து யாரும் சந்தேகப்பட வாய்ப்பில்லை.

2) பரிசின் மதிப்பு 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் என்று சொல்வதற்கு பதில் 10000 ரூபாய் அலது 17000 ரூபாய் என்று சொல்வது நம்மை எளிதாக நம்பச் செய்துவிடும் . சந்தேகப்பட வாய்ப்பிருக்காது.

3) செல்பேசி எண்ணை கொண்டு குலுக்கல் என்பதும் ஒருவகையில் அனைவரும் நம்பவே செய்வர்.

4) பரிசு பொருளை மத்திய அரசின் துரிதஞ்சல் (Speed Post) மூலமாக அனுப்பவதால் சுத்தமாக சந்தேகம் வராது. அரசாங்க தபாலில் வருவதால் இதில் ஏமாற்றுவேலை இல்லை என்றே பெரும்பாலானோர் நம்புவர்.

5) அப்படியே மக்கள் எமாறினாலும், யாரும் 1200 ரூபாய் பணத்திற்காக காவல்துறையில் புகார் செய்யவோ, வழக்கு தொடரவோ முன்வரமாட்டார்கள்.

6) காவல்துறையிடம் இதுபற்றி புகார் செய்தால் பணத்தை இழந்தவர் இன்னும் பல ஆயிரங்களை இழக்க வேண்டிவரும்.

7) ஏமாறும் நபர்கள் இதுபற்றி மற்றவர்களிடம் எச்சரிக்கை செய்யமாட்டார்கள், ஏனெனில் நாம் 1200 ரூபாய் இழந்தோம், அவனும் 1200 ரூபாய் இழந்தால் என்ன? என வாயை மூடிகொள்வர்.

8) மத்திய அரசின் அஞ்சல் வழியாக இதுபோன்று ஒரு நாளைக்கு 400 முதல் 1000 வரையிலான பரிசு பொருட்களை அனுப்பவதால், அஞ்சல் துறைக்கு புகார் என வந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஏனெனில் தினமும் அஞ்சல் துறைக்கு இவர்களால் வரும் வருமானம் பாதிக்கப்படுமே! என்ற நல்லெண்ணம் தான்.

ஏமாற்று பேர்வழிகள் சிறிய அளவிலான அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, குறைந்தது 10 வேலையில்லா நபர்களை மாதம் 30000 சம்பளம் கொடுத்து, வேலைசெய்யும் நபர்களின் செல்பேசி எண்கள் வழியாகவே சென்னையில் அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு செல்பேசி எண்களுக்கும் குத்துமதிப்பாக அழைப்பு விடுகின்றனர். அவ்வாறு யாரேனும் அழைப்பை எடுத்து பேசும்பட்சத்தில் மேலே சொன்னபடி "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது" என பேசி நம்ப வைக்கின்றனர். அவ்வாறு நம்பி விலாசம் கொடுக்கும் நபர்களுக்கு இரண்டே நாளில் சொன்னபடி Parcel ஒன்றை அனுப்புகின்றனர். அந்த Parcel லில் உங்கள் முகவரி மட்டும் தான் இருக்கும். அவர்களுடைய முகவரி இருக்காது. அவ்வாறு வரும் parcel - லை தபால்காரரிடம் 1200 ரூபாய் கட்டி வாங்கி உள்ளே பார்த்தல் இருப்பது மோதிரம் தான், ஆனால் மோதிரம் தங்கமும் கிடையாது அதன் மேல் வைரமும் இருக்காது, எல்லாமே Covering தான்.

ஐயோ இது தங்கம் இல்லை Covering என்று யாரிடம் போய் புகார் செய்யமுடியும். தபால்காரரிடம் போய் "இது தங்கம் இல்லை Covering பணத்தை திரும்பி கொண்டுங்கோ" என கேட்டால் அவர் உங்களை காரி காரி துப்புவார்.

காவல் துறையிடம் போய் நடந்ததை சொல்லி நான் புகார் செய்யவேண்டும் என கேட்டால், அவர்களும் உங்களை கழுவி கழுவி ஊத்துவார்கள். மேற்கொண்டு "கல்லாவில் 2000 ரூபாய் பணத்தை கட்டிட்டு போங்க பாப்போம்" என்று சொல்வார்கள். 1200+2000 = 3200 ரூபாயும் மொத்தமாக அம்பேல் ஆகிவிடும்.

இந்த நூதன ஏமாற்று வேலை கடந்த 3 ஆண்டுகளாக வெவ்வேறு பரிணாமங்களில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களிடம் ஆசையில் பணத்தை கட்டி எமாறியவர்கள் பல லட்சங்களை தாண்டும். ஒரு நாளைக்கு இந்த ஏமாற்று வேலைக்கு 100 முதல் 150 பேர்கள் சிக்குகிறார்கள். செலவீனம் போக எம்மாற்றுப்பேர்வளிகளுக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 80 ஆயிரம் ரூபாய் வருமானமாக வருகிறது. மாதம் மட்டும் சராசரியாக ஒன்றே முக்கால் கோடியை எட்டுகிறது.

இதனால் தான் இதுவரை இந்த நூதன திருட்டை பற்றி யாரும் வாயை திறக்கவில்லை. வாயை திறந்தால் திறந்த வாயில் பணத்தை கொண்டு அடைக்கும் போது சத்தம் வருமா என்ன?. இந்த திருட்டு வேலையில் மத்திய அரசாங்கத்தின் தபால் துறையும் தெரிந்தோ தெரியாமல் உடந்தையாக உள்ளது. ஒரே வகையான Parcel ஒரே நபரிடம் இருந்து நாட்டின் பல பாகங்களுக்கு அனுப்புபவர் விலாசமே இல்லாமல் அனுப்பும்போது தானே முன்வந்து கேள்விகேட்க வேண்டுமல்லவா?, அல்லது காவல்துறையிடம் புகார் செய்யவேண்டுமல்லவா?. இந்த திருட்டில் தவறு செய்யாத தபால்துறை என்றால் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட ஒருவர் தபால் நிலையத்தில் புகார் செய்த பிறகாவது நடவடிக்கைகளில் இறங்கியிருக்கவேண்டுமல்லவா?. இதுவரை தபால் துறையிடம் இருந்து இதுபற்றிய எந்த புகார்களும் மேலே செல்லவில்லை. இவர்களிடம் தினமும் 100 வெடிகுண்டுகளை parcel செய்து நாட்டின் பல பாகங்களுக்கு அனுப்பினால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள் போல.

இதுபோல் ஒரு எம்மாற்று வேலை சென்ற ஆண்டு திருச்சி மாவட்டம் பூலாங்குடி என்ற கிராமத்தில் நடந்தது. அங்கு ஒரே கிராமத்து மக்கள் சுமார் 30 பேர்கள் தங்க காசுக்காக ஆசைப்பட்டு தலா 2500 ரூபாயை இழந்தார்கள். இதுபற்றி அனைவரும் அப்போதே அப்பகுதி தபால் நிலையத்தில் புகார் செய்தும், எந்த தபால் துறை அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அவர்களிடம் 75000 ரூபாய் கையில் இருந்தும், இது ஏமாற்று வேலை என்று தெரிந்தும் பணத்தை திருப்பி தரவோ அல்லது காவல் நிலையத்தில் புகார் செய்யவோ அல்லது புகார் செய்யும்படி ஏமாந்தவர்களுக்கு அறிவுரை சொல்லவோ இல்லை. இதில் இருந்தே தெரிகிறதே, இந்த நூதன திருட்டுகளில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்று.

தேவையா இது?

நம்மவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? 20000 ரூபாய் பரிசை நமக்கு இலவசமாக கொடுப்பதாக சொல்லும் ஒருவன், ஏன் நம்மிடம் 1200 ரூபாய் கேட்க வேண்டும். அப்படியே நல்லவர்களாக இருந்தால் 20000 ரூபாயில் 1200 ரூபாயை கழித்துக்கொண்டு மீதமுள்ள 18800 ரூபாயை தானே பரிசாக தரவேண்டும்?... என்றெல்லாம் உங்கள் மூளை குதர்க்கமாக வேலை செய்யாதா?

'கடையை விளம்பரம்படுத்த ஊரில் உள்ள அனைவருக்கும் மோதிரத்தையும், தங்க காசையும் இலவசமாக கொடுத்தால் அவன் பரதேசமல்லவா போக வேண்டும்', என்று கூட சிந்திக்க முடியாதா?

இலவசம் என்று தொ.காவில் விளம்பரம் போட்டால் அடித்து பிடித்துகொண்டு 5000 செலவழித்து 200 ரூபாய் இலவசப்பொருளை வாங்கும் கூடம் தானே நாம்.

இந்த காலத்தில் பலரும் தூங்கும்போது குறட்டை விட்டு தூங்க காரணம், அவர்களை பிணம் என்று குழியில் போட்டு கல்லை ஊன்றிவிடுவார்கள் என்று பயம் தான். இப்படிப்பட்ட காலத்தில் ஒருவன் நான் இலவசமாக இதை தருகிறேன்!, அதை தருகிறேன்! என்று சொல்லும்போதே, சுத்தியால் தலையில் அடி விழுவதுபோல் சுதாரிக்க வேண்டாமா?

இப்படி இருந்தால் எப்படி?

தமிழன் என்றுமே ஏமாறப் பிறந்தவன் தானா?அவர்கள் கொடுத்த விலாசம்: அம்பத்தூர் எஸ்டேட் , சினிவாசா காலனி, 3வது தெரு.

மேலும் இந்த தொடர்பெண்களில் இருந்து அழைப்பு வந்தால் அவிங்களே தான் உசாரா இருங்கோ ... 9042557538 9042551867- எனக்கு தெரிந்த எண்கள் இவை இரண்டும் தான். அவர்களிடம் பல எண்கள் உண்டு.

(குறிப்பு : இதை படித்துவிட்டு இதெல்லாம் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணம், இதை போய் இவ்வளவு பரபரப்பா பேசவேண்டிய தேவை இல்லை என்று நினைக்காமல் உங்களுடைய நண்பர்களுக்கு, குறிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதை பற்றி கொஞ்சம் எடுத்து கூறுங்கள், வழக்கம் போல் வந்தால் பார்த்துகொள்ளலாம் என்று இருந்து விட்டாதீர்கள். பணத்தை இழந்தால் திரும்ப வாங்க முடியாது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித இடையூறுமின்றி கட்சிதமாக தொழில் செய்பவர்கள் திரும்ப திரும்ப வெவ்வேறு பரிசு திட்டத்துடன் மக்களை ஏமாற்றி வருபவர்கள். எனவே இந்த செய்தியை சமூக பிணையங்களில் (Social Network) பகிருங்கள். பிரச்சனையின் வீச்சை உணருங்கள்.)


- பிரபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...